குதிரை பேரம் வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் மனுக்கள் தள்ளுபடி: கைது செய்ய திட்டமிடும் போலீஸ்..?
குதிரை பேரம் வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது தொடர்பாக...
சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி
தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு அளிக்கும்படியும், தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் ரூ. 35 கோடி லஞ்சமாக தருவதாகவும் தொலைபேசி மூலம் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் துறை ஆணை ஏ.அமல்ராஜிடம் புகாா் அளித்தார்.
இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த வழக்குத் தொடா்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இளையராஜா எம்எல்ஏவிடம் பேசியது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூ-டியூபரும், கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வருபவருமான திருநாவுக்கரசு என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சோ்ந்த நரேஷ் உள்பட அடுத்தடுத்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில்கூட என்னுடைய பெயர் இடம்பெறவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீஸார் என்னைக் கைது செய்யக்கூடும் என்பதால், எனக்கு முன்பிணை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
முன்னதாக, இதே வழக்கில் செந்தில்பாலாஜியின் சகோதரார் அசோக்குமார் முன்பிணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு மனுக்களும் விசாரணைக்கு வந்த நிலையில், இருவருக்கும் முன்பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது.
செந்தில் பாலாஜி, அசோக்குமார் மனுக்கள் தள்ளுபடி
இந்த நிலையில்,. விசாரணைக்கு ஆஜராகும் போது விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாகு, வேறொரு வழக்கில் கைது செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்களில், ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் நிபந்தனையை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளதாகவும், அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தங்களை கைது செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசியமில்லை
குதிரை பேர வழக்கில் தங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்படியான எந்த புலன் விசாரணையயும் தடுக்கவில்லை என்றும், காவல் துறையில் நிலுவையில் உள்ள ஏதேனும் வழக்குகளின் விசாரணைக்கு தாங்கள் தேவைப்படுவதாக இருந்தால், பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 35(3) வது பிரிவின் கீழ் முறையாக நோட்டீஸ் அனுப்ப காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை துன்புறுத்தக் கூடாது
எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால், சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுவில் பொத்தாம் பொதுவான உத்தரவை கோருவதாலும், பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாலும், மனுவுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்குரைறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.
செந்தில்பாலாஜி, அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைறிஞர் என்.ஆர்.இளங்கோ, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற தங்களை வேறு வழக்குகளில் கைது செய்யக்கூடும் என அச்சம் உள்ளதாகவும், வழக்குகளின் விசாரணையில் தலையிடவில்லை. மாறாக விசாரணைக்கு அழைத்து சட்டப்படி நோட்டீஸ் அனுப்பவேண்டும் என மட்டுமே கோருவதாகவும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
செந்தில் பாலாஜி, அசோக்குமார் மனுக்கள் தள்ளுபடி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சரணடைந்து முன் ஜாமீன் பெறவில்லை.
இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என கோர முடியாது. மற்ற வழக்குகளை பொருத்தவரை, முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Senthil Balaji, Ashok Kumar's petitions in the 'horse-trading' case dismissed: Police to proceed with arrest?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.