எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்காமல் குழப்பத்தை ஏற்படுத்தும் தவெக அரசு: செந்தில்பாலாஜி
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பேரவையில் தவெக அரசு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாக செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பேரவையில் தவெக அரசு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் செந்தில் பாலாஜி பேசியதாவது, "சட்டப்பேரவை என்பது சுமுகமாக நடைபெறுவதாகவும், ஆரோக்கியமான விவாதம் நடப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டின் நிலைகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதும், அதற்குரிய அமைச்சர்களும் முதல்வரும் பதிலளிப்பதுதான் நடைமுறை.
ஆனால், புதிதாக அமைந்துள்ள தவெக அரசில் எதிர்க்கட்சியினர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், சட்டப்பேரவை நிகழ்வுகளை வேறுவிதமாக, கூச்சல் - குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
Advertisement
Advertisement
மின்சாரத் துறையில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போய்விட்டதாகவும், 38 ஹார்ட் டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் (நிர்மல் குமார்) கூறினார். அந்த 20 ஹார்ட் டிஸ்க்குகளை எங்கிருந்து கண்டுபிடித்தார் என்றுதான் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால், அதற்கு கடைசி வரையில் அவர் பதிலளிக்கவே இல்லை.
கடந்த திமுக ஆட்சியில் 99,000 மின்மாற்றிகள் மாற்றப்பட்டிருப்பதாகவும், புதிதாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். 2021-ல் மின்வாரியத்தில் இருந்த ரூ. 14,500 கோடி கடனை 2025-ல் ரூ. 933 கோடியாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இவ்வாறு திமுகவின் சாதனைகளை வெள்ளை அறிக்கையில் கூறிவிட்டு, மின்வாரியத் துறையில் திமுக ஆட்சியில் எதுவுமே செய்யப்படவில்லை என சட்டப்பேரவையில் கூறுகின்றனர். இதுகுறித்து நான் கேள்வி எழுப்பினேன்.
ஆனால், அதற்கு பதிலளிக்கத் திறமை இல்லாமல், திராணி இல்லாமல், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி சட்டப்பேரவையை நடத்தி வருகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள். எந்தத் துறையில் தவறு நடந்தது? எவ்வாறு நடந்தது? யார் தவறு செய்தார்கள்? என நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. இதில் என்ன நேரம், காலம் ஜோதிடம் பார்க்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
TVK government creates chaos in the Assembly instead of answering opposition questions, says DMK MLA Senthil Balaji
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.