செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! தலைமறைவா?
செந்தில் பாலாஜி 2-வது நாளாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாதது பற்றி...
குதிரை பேர வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து இரண்டாவது நாளாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட ஆஜராகவில்லை.
தவெக ஆட்சியைக் கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்த வழக்கில் மறுஉத்தரவு வெளியாகும் வரை நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதனிடையே, ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த டாஸ்மாக் ஊழல் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜி பெயரும் சேர்க்கப்பட்ட நிலையில், அவரின் வீட்டில் புதன்கிழமை சோதனை நடத்தி சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேற்று மனு அளித்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் அவசர வழக்காக செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், டாஸ்மாக் வழக்கில் காவல்துறையினர் கைது செய்வதற்கு வாய்ப்பிருப்பதால், நேற்றுமுதல் செந்தில் பாலாஜி தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், குதிரை பேர வழக்கில் நேற்று மாலையும், இன்று காலையும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.
இந்த நிலையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆக. 4 ஆம் தேதி வரை ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் தனது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக வழக்குரைஞர்கள் உடன் ஆலோசனை நடத்த இருப்பதால் விலக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Senthil Balaji fails to appear for the second day - Has he gone into hiding?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.