அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை! முக்கிய அறிவிப்பு
அரசுப் பேருந்துகளில் ஸ்பீக்கர் ஒலியுடன் செல்போன் பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்...
அரசுப் பேருந்துகளில் ஸ்பீக்கர் ஒலியுடன் செல்போன் பயன்படுத்தக் கூடாது, சக பயணிகளுக்கு இடையூறு செய்யும்வகையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
பொது இடங்களில் மக்கள் எந்த நேரத்திலும் மொபைல்போன் பயன்படுத்துவது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. சாலையைக் கடக்கும்போது, பேருந்துகள், ரயில்களில் பயணிக்கும்போது, ஏன் சிக்னலில் நிற்கும்போதுகூட மக்கள் ரீல்ஸ் பார்க்கும் மோசமான நிலைதான் இன்று இருக்கிறது.
இதில், குறிப்பாக அரசுப் பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும்போது சத்தமான ஒலியுடன் ரீல்ஸ் விடியோக்கள் பார்ப்பது, போனில் சத்தமாக பேசிக்கொண்டு செல்வது என மற்ற பயணிகளுக்கு இடையூறாகவே இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் போக்குவரத்துத் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல் ராஜ் இதுதொடர்பாக அனைத்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன்படி, அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்தக் கூடாது. செல்போன் ஸ்பீக்கருக்கு பதிலாக இயர்போன் அல்லது ஹெட்போனை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு இடையூறு செய்யும்வகையில் போனில் சத்தமாக பேசக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அரசுப் பேருந்துகளில் இது தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சுமூகமாக பயணம் செய்யும் பொருட்டும், சக பயணிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி நடந்துகொள்ள ஏதுவாக கீழ்க்காணும் பயண நெறிமுறைகளை பயணிகள் கடைப்பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும்போது,
1. மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை 2017-இன் விதி 5(10)-இன் படி, வாகனத்தில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்யவேண்டும்.
2. தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் 1989 விதி 228- இன் படி, சக பயணிகளுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாகக் கருதப்படும். இதில் கைபேசியில் பயணம் முழுவதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே தொடர்ந்து பயணித்தல் மற்றும் கைபேசியில் ஸ்பீக்கர் பயன்படுத்துதல், இயர்போன் (Earphone) / ஹெட்ஃபோன் (Headphone) இல்லாமல் இசை கேட்பது மற்றும் காணொலியில் (Video) படம் பார்த்தல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். Bluetooth இயர்போன்/ஹெட்ஃபோன் பயன்படுத்தி பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், பயணிகளின் கைபேசி உபயோகம் மற்றவர்களின் அமைதி நிலையை கெடுக்காமலும் இருக்க வேண்டும்.
மேற்காணும் கட்டுப்பாடுகளை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும், பயணம் செய்யும் பயணிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், அனைத்து பேருந்துகளில் உட்புறத்தில் பயணிகளுக்குத் தெளிவாகத் தெரியும்படி விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் (Stickers) ஒட்டப்பட வேண்டும்.
விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அச்சிட்டு அனைத்து பேருந்துகளிலும் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்துகளில், ரயில்களில் சக பயணிகளுக்கு இடையூறு செய்யும்வகையில் பயணிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை செய்ய வேண்டும், அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் மெட்ரோ ரயில்களில் கட்டுப்பாடுகளைப் போல ரயில்களிலும் பேருந்துகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என தினமணி இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Use of mobile phones with loudspeaker mode is prohibited on government buses
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.