2016 தேர்தலில் இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றி செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதைப் பற்றி...
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றி செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐ.எஸ். இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றளித்த 203 தபால் வாக்குகள் செல்லாது என தவறாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி, இன்பதுரையின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் கூறி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுக்களில் எண்ணப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி, 2019 ஆம் ஆண்டு அக்., 4 ஆம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முடிவுகளை அறிவிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்துள்ளதால் 2016 தேர்தல் வழக்கை நிலுவையில் வைத்திருப்பது தேவையற்றது எனக் கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. அதே நேரத்தில், தபால் வாக்குகளுக்குப் பள்ளி தலைமையாசிரியர் சான்றளிக்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும் என மே 21 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், மறு வாக்கு எண்ணிக்கை குறித்த அறிக்கையில், தபால் வாக்குகளில் 153 வாக்குகளை அப்பாவு பெற்றிருக்கிறார் என்று கூறி, இதன்மூலம் அவர் 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவித்தார்.
தலைமை ஆசிரியர்கள் சான்றளிக்க தகுதியான அதிகாரிகள் தான் என ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டதால் தபால் வாக்குகள் செல்லும் என கூறிய நீதிபதி, திமுக வேட்பாளர் அப்பாவுவின் தேர்தல் வழக்கை ஏற்றுக்கொண்டு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு வெற்றிபெற்றதாக அறிவித்தும், இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தும் தீர்ப்பளித்தார்.
தவறான முறையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை 2016-2021ஆம் ஆண்டுகளுக்கான பென்ஷன் சலுகைகளை கோர முடியாதே தவிர, வேறு எந்த தகுதிநீக்கமும் அவருக்கு வராது என உத்தரவிட்ட நீதிபதி, அந்த 5 ஆண்டு காலத்தில் அனைத்து ஆவணங்களிலும் இன்பதுரையின் பெயருக்கு பதிலாக அப்பாவுவின் பெயரை இடம்பெறச் செய்யவேண்டும் என சட்டப்பேரவைச் செயலருக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த உத்தரவில், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக இந்த வழக்கில் முடிவெடுக்க 10 ஆண்டுகால தாமதம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, நீதிமன்றங்கள் இதுபோன்று தாமதத்தை ஏற்படுத்தினால், ஜனநாயகத்தின் ஆன்மாவை வீழ்த்திவிடும் என்றும், இதேபோல நம் நாடு சென்றால், நம்முடன் சுதந்திரம் பெற்ற பிற நாடுகளை போல இந்தியாவும் மாறிவிடுமோ என அச்சம் தெரிவித்துள்ளார்.
The Madras High Court has ruled that the victory of AIADMK candidate Inbadurai in the 2016 election is invalid.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.