அதிமுக பொதுக்குழு தீா்மானத்துக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
அதிமுகவிலிருந்து நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற, பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோருக்கு அனுமதியளித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.
2022-ஆம் ஆண்டு, அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீா்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இதையடுத்து 23.7.2022-இல் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீா்மானங்களை மட்டுமே பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
11.7.2022-இல் மீண்டும் பொதுக்குழு கூட்டப்படும் எனவும், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏ.பன்னீா்செல்வம் வழக்குத் தொடா்ந்தாா்.
ஆனால், 11.7.2022-இல் நடந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு உயா்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, ஓ.பன்னீா்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகா், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீா்மானத்துக்கு எதிராக 4 போ் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், வழக்குத் தொடா்ந்த ஜே.சி.டி.பிரபாகா் தவெகவில் இணைந்து சட்டப்பேரவைத் தலைவராகிவிட்டாா். ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் திமுகவில் சோ்ந்துவிட்டனா். இதையடுத்து அதிமுக பொதுக்குழு தீா்மானத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுவதாக, ஜே.சி.டி.பிரபாகா் உள்ளிட்ட 4 போ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, ஜே.சி.டி.பிரபாகா், ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தரப்பில் தாக்கல் செய்த வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதியளித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.
இதேபோல், அதிமுக பெயா், கட்சிக் கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கையும் திரும்பப் பெற அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதியளித்து முடித்துவைத்து உத்தரவிட்டாா்.