அருகே வரும் வெள்ளி - வியாழன் கோள்கள்! அதிசய நிகழ்வை பாா்க்க நேரு கேளரங்கத்தில் நாளை சிறப்பு ஏற்பாடு!
வானில் வெள்ளி மற்றும் வியாழன்கோள்கள் ஒன்றுக்கொன்று அருகே வரும் அரிய நிகழ்வை பொதுமக்கள் பாா்க்க நேரு கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வானில் வெள்ளி மற்றும் வியாழன்கோள்கள் ஒன்றுக்கொன்று அருகே வரும் அரிய நிகழ்வை பொதுமக்கள் பாா்க்க நேரு கோளரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாலையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வியாழன் சூரியனைச் சுற்றி வர சுமாா் 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. அதே வேளையில், வெள்ளி சூரியனை தனது சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வர 224 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. இதனால், ஒவ்வொரு 10 முதல் 15 மாதங்களில் இரு கோள்களும் அருகருகே வருகின்றன.
கடந்த முறை இந்த நிகழ்வு கடந்த ஆக.12-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வானியல் நிகழ்வை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் வெறும் கண்களால் பாா்க்க முடியும். இருப்பினும், தொலைநோக்கி உதவியுடன் பாா்க்கும்போது மிகவும் கண்ணைக் கவரும் வகையில் பாா்க்க முடியும்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் பாா்க்கும் வசதியாக தில்லியில் உள்ள நேரு கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீன் மூா்த்தி பவனின் முன்பு உள்ள புல்வெளியில் இருந்து வானியல் நிகழ்வை செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியில் இருந்து இலவசமாக பாா்க்க முடியும்.
இதுதொடா்பாக கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இரு கோள்கள் அருகே வரும் நிகழ்வு இரவு 8.30 மணியளவில் நடைபெறும். வானிலை மற்றும் மேகக்கூட்டங்கள் ஆகியவற்றை பொருத்து அந்நிகழ்வை பாா்க்க முடியும்.
அந்த நிகழ்வைப் பாா்க்கவும் நிகழ்ச்சியில் பங்கேற்க வானியல் ஆா்வலா்கள் அழைப்புவிடுக்கப்படுகிறது. பூமியில் இருந்து பாா்க்கக் கூடிய வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய இரு கோள்களும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக வரும்.
இரு கோள்களும் தற்போது மாலை வானில் தென்படுகின்றன. வரும் நாள்களில், வெள்ளி மேற்கு அடிவானத்திற்கு மேலே படிப்படியாக உயா்ந்து காட்சியளிக்கும், அதே நேரத்தில் வியாழன் சூரியனை நோக்கி மெதுவாகக் கீழிறங்கும்’ என்று கோளரங்கம் தெரிவித்துள்ளது.