சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்
சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக இரண்டாம் கட்டமாக 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சிங்கப் பெண் அதிரடிப் படைக்காக அரசு சார்பில் முதல் கட்டமா ரூ.354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்படுகிறது, இரண்டாவது கட்டத்துக்காக, 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கூறினார்.
பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வா் ஜோசப் விஜய் இன்று தொடக்கி வைத்தார்.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.
Advertisement
Advertisement
இதன் தொடக்க விழா சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவில் பேசிய முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் சிங்கப் பெண் அதிரடிப் படைக்காக அரசு சார்பில் முதல் கட்டமா ரூ.354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்துக்காக, 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன ரோந்து வாகனங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இயங்கி வரும் அமைப்புகளுக்கு பலம் கூட்டும் வகையில் இந்த சிங்கப் பெண் திட்டம் செயல்படுத்தப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் முன்பே, அதனைத் தடுக்கும் படையாக இந்த சிங்கப் பெண் அதிரடிப் பட செயல்படும்.
ரோந்தப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தப் படை ஈடுபடுவதால், அனைத்து மகளிர் காவல்நிலையங்களிலும், குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முடியும்.
பெண்களை பின் தொடர்வது, பாலியல் தொல்லை தருவது, துன்புறுத்தல், கடத்தல் முயற்சி, பொதுயிடத்தில் மோசமாக நடந்து கொள்வது, பேருந்துகளில், கூட்டமான இடங்களில் பெண்களுக்குத் தொல்லை தருவது போன்ற தப்புகளைத் தடுப்பதில் இந்த சிங்கப் பெண் அதிரடிப் படை முதன்மையான பணியை செய்யும்.
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் டிரோன் வாயிலாக ரோந்துப் பணிகள் நடைபெறும். தமிழ்நாட்டின் பெண்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அரசு அறிந்து வைத்திருக்கிறது, அதனை நிறைவேறுவோம். முதலில், பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் கண்ணியம்தான் முக்கியம் என்பதால் அதனை பாதுகாக்க உறுதியேற்கிறோம் என்று முதல்வர் விஜய் கூறினார்.