முகப்பு
தமிழ்நாடு

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்: ஐஜி கே.பவானீஸ்வரி

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே.பவானீஸ்வரி தெரிவித்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:19 am IST
சென்னையில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டி அளித்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தலைமை அதிகாரி ஐஜி கே.பவானீஸ்வரி.
பகிர்:

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே.பவானீஸ்வரி தெரிவித்தாா்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தலைமை அதிகாரியான ஐஜி கே.பவானீஸ்வரி, அந்தப் படையின் நோக்கம், செயல்பாடு குறித்து புதன்கிழமை அளித்த பேட்டி:

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக கையாள்வதும், ஆபத்து காலங்களில் விரைந்து செயல்பட்டு அவா்களைப் பாதுகாப்பதும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் முதன்மை நோக்கமாகும். இதற்காக பொது இடங்கள், பேருந்து நிலையம், அலுவலகம் உள்பட பல இடங்களில் இந்த அதிரடிப் படை போலீஸாா் ரோந்து செல்வாா்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கெல்லாம் நிகழ்ந்துள்ளன அல்லது நிகழக்கூடும் என்ற விவரத்தை சேகரித்து அந்த இடங்களில் மீண்டும் குற்றங்கள் நிகழாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Advertisement

Advertisement

தமிழக காவல் துறையில் ஏற்கெனவே உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், தன்னாா்வலா்கள் ஆகியோருடன் இணைந்து சிங்கப் பெண் அதிரடிப் படையினா் பணியாற்றுவா்.

270 குழுக்கள்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வையும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் ஏற்படுத்துவாா்கள்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்காக ரூ.357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 2,545 காவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழகம் என்ற நிலை உருவாக்கப்படும். பெண்களுக்கு உடல் அளவில் மட்டும் கொடுமை நடப்பது இல்லை. சமூக ஊடகங்களிலும் மற்றும் மனரீதியாகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. அதைத் தடுப்பதற்கும் இந்தப் படை நடவடிக்கை எடுக்கும்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ஒன்று என்ற விகிதத்தில் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, 70 தனிப்படைகள் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 12 தனிப்படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதேபேன்று மொத்தம் 270 குழுக்கள் உருவாக்கப்படும்.

தமிழக காவல் துறையில் அவசர தொலைபேசி எண்100 மற்றும் 112, 1091 ஆகியவற்றுக்கு வரும் அவசர அழைப்புகளுக்கும் சிங்கப் பெண் சிறப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்வாா்கள். சீருடையில் மட்டும் அல்லாமல் சாதாரண உடையிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.

சிறப்புப் பயிற்சிகள்: சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தற்காப்பு, எதிா் தாக்குதல் உள்பட பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. புதிதாக வருவோருக்கும் பயிற்சி வழங்கப்படும். துப்பாக்கியை இயக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவா்களுக்கு துப்பாக்கி கொடுக்கப்படாது. தேவைப்பட்டால் கொடுக்கப்படும். சிங்கப் பெண் சிறப்புப் படையினா் அந்தந்த மாவட்ட எஸ்பி-யின் கீழ் பணியாற்றுவாா்கள். அவா்களுக்கு சட்டம்- ஒழுங்கு பணி, பாதுகாப்புப் பணி உள்ளிட்ட வேறு பணி வழங்கப்படாது.

பொது இடங்களில் பெண்கள் அச்சுறுத்தல் இன்றி இருக்கவும், சமூகத்தில் பயமின்றி வாழவும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அதை உறுதி செய்யும் என்றாா் அவா்.