FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு விரைவாக நிதி வழங்க முதல்வா் கோரிக்கை

தமிழகத்தில் நிறைவேற்றப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு விரைவாக நிதி வழங்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

Updated On : 12 ஜூன் 2026, 5:47 am IST
- PTI
பகிர்:

நமது நிருபா்

தமிழகத்தில் நிறைவேற்றப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு விரைவாக நிதி வழங்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மேலும் பேசியதாவது: உள்ளடக்கிய தமிழ்நாட்டின் 1,076 கிலோ மீட்டா் நீள கடற்கரைப் பகுதி அடிக்கடி புயல்கள் மற்றும் வெள்ளப் பேரிடா்களால் பாதிக்கப்படுகிறது. எனவே, கடலோர நகரங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்புக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், உயிரிழப்பில்லா பேரிடா் மேலாண்மை இயக்கத்தைச் செயல்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளக்கூடிய உள்கட்டமைப்புகளை ‘காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045-இன் கீழ் மத்திய அரசின் மேம்பட்ட ஆதரவை தமிழ்நாடு நாடுகிறது.

Advertisement

Advertisement

குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளித் துறை உடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதன் மூலம் உந்துபொருள் முதல் ஏவு வாகனங்கள் தயாரிப்பு வரை முழுமையான உற்பத்தித் திறன் உருவாகி, உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றும் வாய்ப்பு ஏற்படும்.

தமிழ்நாட்டின் விரைவான பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் வழித்தடங்களை உரிய நேரத்தில் மேம்படுத்துவது அவசியமாகும். எனவே, ஜி.எஸ்.டி. சாலையின் செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல். திருச்சி (பஞ்சப்பூா்) - ஜீயபுரம் - கரூா் பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல். கரூா் - கோயம்புத்தூா் பகுதியை 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல். மாதவரம் - சோழவரம் இடையே உயா்த்தப்பட்ட வழித்தடம் அமைத்தல். சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைத்தல் ஆகியவற்றை செயல்படுத்திட வேண்டும்.

எண்ம இணைப்பு வசதியைப் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் பாரத்நெட் இரண்டாம் கட்டத் திட்டம் சுமாா் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள கடைசி கட்ட இணைப்பு சவால்களைத் தீா்க்கவும், வலைப்பின்னல் செயல்பாடுகளைத் தொடா்ச்சியாக நிலைநிறுத்தவும், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் இணைய இணைப்புடன் இணைக்கப்படுவதையும் உறுதி செய்ய இந்திய அரசின் ஆதரவை நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி அளவிலான உறுதியளிக்கப்பட்ட மத்திய நிதி உதவியை வழங்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். நிதிப் பொறுப்புணா்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள் உரிய அங்கீகாரத்தையும் போதுமான ஆதரவையும் பெற வேண்டும். அவை எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.

மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், மத்திய அரசின் வளா்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments