வெறும் ரூ. 730 தான் சேதம்! 25 ஆண்டுகளுக்குப் பிறகு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனை!
மதுரையில் நீதிமன்ற வளாகத்தில் கலவரத்தில் ரூ. 730 மதிப்பிலான பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக 3 பேருக்கு 25 ஆண்டுகள் கழித்து 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை
மதுரையில் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ரூ. 730 மதிப்பிலான பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக 3 பேருக்கு 25 ஆண்டுகள் கழித்து 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கலவரத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 2001 ஜூன் 30 ஆம் தேதியில் மதுரை திடீர் நகர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாறன் என்பவர் உள்பட திமுக நிர்வாகிகள் சிலரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற காவலுக்காக அவர்களை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
Advertisement
Advertisement
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் கற்களை வீசியும், நீதிமன்றத்துக்கு அருகிலிருந்த அறிவிப்புப் பலகையைச் சேதப்படுத்தியதுடன், மற்ற மூன்று நீதிமன்ற அறைகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தனர். இந்த இழப்புச் சேதங்களை ரூ. 730 என பொதுப்பணித் துறை மதிப்பிட்டது.
மேலும், இந்தச் சம்பவத்தைத் தடுக்க முயன்ற காவல் ஆய்வாளரின் காதில் கல் பட்டதில், அவருக்கு ரத்தக் காயமும் ஏற்பட்டது. இதுவும் ஒரு தனி வழக்காக பதிவு செய்யப்பட்டது.
2001 டிசம்பர் 21-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, 2005-ல் அமர்வு நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்னரே வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் உயிரிழந்து விட்டனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் மேலும் இருவர் விசாரணைக்கு வராததால் வழக்குகள் பிரிக்கப்பட்டன. இருப்பினும், இந்த வழக்கு தொடர்பாக மாறன் பலமுறை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த நிலையில்தான், 2001-ல் கலவரத்தில் ஈடுபட்டதாக மாறன் (57), எஸ். கணேசன் (58), பி. கோபாலகிருஷ்ணன் (66) ஆகியோர் மீது கலவரம் செய்தது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியது, அரசு ஊழியரைத் தடுத்தது மற்றும் காயப்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதாவது, வெறும் ரூ. 730 சேதத்துக்காக 25 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எம். உதயவேலவன், தமிழ்நாடு பொதுச் சொத்து சேதச் சட்டத்தின்கீழ் குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
DMK's Maran Jailed 25 Years After Protesting Former CM Karunanidhi's Arrest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.