ஆங்கிலேயர்களுக்கு சவால்விட்ட மருதுபாண்டியர்களின் ஜம்புத்தீவு பிரகடனம்! தமிழக ஆளுநர் பதிவு
மருதுபாண்டியர்களின் ஜம்புத்தீவு பிரகடனம் வெளியான நாள் குறித்த தமிழக ஆளுநரின் பதிவு பற்றி...
ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விரட்ட ஆயுதப்போர் புரிந்து, மண்ணும் மானமும் பெரிதென்று மாபெரும் போர் செய்த மாவீரர்கள் மருதுபாண்டியர்கள் என தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் புகழாரம் சூட்டியுள்ளார்.
1801 ஆம் ஆண்டு ஜூன் 16ல் சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்கள் திருச்சியில் "ஜம்புத்தீவு பிரகடனம்" என்ற அறிக்கையை வெளியிட்டனர். 'முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம்' எனப்படும் இது, மக்களிடையே எழுச்சியை உருவாக்கி போராட்டத்திற்கு வழிவகுத்து வெள்ளையர்களை வெளியேற்றும் ஓர் ஆயுதமாக இருந்தது.
இந்நிலையில் ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிட்ட இந்த நாளை (ஜூன் 16) நினைவுகூர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் மருது பாண்டியர்கள் பற்றியும் அவர்களது பிரகடனம் பற்றியும் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில்,
"முதல் சுதந்திரப் போருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, ஆற்காடு நவாப்களுக்கு அடியாள்களாக வந்து அதிகாரத்தைப் பறிக்க முயன்ற ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விரட்ட ஆயுதப்போர் புரிந்து, மண்ணும் மானமும் பெரிதென்று மாபெரும் போர் செய்த மாவீரர்கள் மருதுபாண்டியர்கள்!
பாரதத்தின் கீழ் பகுதி நாவல் பழத்தை ஒத்திருப்பதால் வேதங்களிலும் புராணங்களிலும் ஜம்புத்தீவு என்றும் சங்க இலக்கியங்களில் நாவலந்தீவு என்றும் அழைக்கப்பட்ட பாரத தேசத்தை காப்பதற்கும், மொழியாலும், தொழிலாலும், இனத்தாலும் பிரிவுகள் பல இருந்தாலும் பாரதம் முழுவதும் ஒரே நாடு என்ற நோக்கில் மருதுபாண்டியர்கள் திருச்சியில் வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடனம்" என்பது க்ஷத்திரியனின் சங்க நாதம்! பாரத விடுதலை வரலாற்றில் ஒரு மைல்கல்! விடுதலை வேட்கையை உணர்ச்சிகளாய் கொட்டி உருவாக்கிய அறிக்கை கோழையினையும் கொதித்தெழச் செய்யும்!
ஆங்கிலேயப் படையில் அடிமைச் சேவகம் செய்யும் நம்மவர்கள், அங்கிருந்து வெளியேறி வெள்ளையரைக் கண்ட மாத்திரத்தில் வெட்டி வீழ்த்த வேண்டுகோள் வைக்கிறார்கள், இதுவே பின்னாளில் ஆயுத போராட்டத்திற்கு அடிகோலிற்று!
இதைச் செய்யாதவர்கள் என்ன பாவம் செய்தவர்கள் ஆகிறார்கள் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டு "ஐரோப்பிய இழி பிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத மருதுபாண்டியர்கள்" என்று பிரகடனத்தை நிறைவு செய்கிறார்கள்.
பல்லாயிரம் வீரர் கொண்ட படையாலும் மருது சகோதரர்களை மண்டியிட வைக்க முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயே நயவஞ்சகர்கள், காளையார் கோவிலை பீரங்கியால் பிளப்போம் என அறிவிக்க, தர்மம் காக்க தலை கொடுத்தனர் மருது சகோதரர்கள்!
ஜம்புத்தீவு பிரகடனம் தான் முதன்முதலில் பரங்கியருக்கு பாரதம்விட்ட பகிரங்க சவால்! பாரதம் சுயசார்புடன் என்றும் நிற்க எல்லோரும் நினைவிற் கொள்ள வேண்டியது ஜம்புத்தீவு பிரகடனம்!!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Jambudvipa Proclamation of Maruthu Pandiyars who challenged the British: TN governor X post
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.