பேரவையா? சூட்டிங் ஸ்பாட்டா? 40 நாள்களில் எதை கிழித்தீர்கள்! உதயநிதி ஆவேசம்!
பேரவையில் முதல்வரின் பேச்சை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருப்பது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் பதிலுரையில் திமுகவுக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று பதிலுரை அளித்தார்.
அப்போது திமுகவுக்கு எதிராக முதல்வர் விஜய் குற்றச்சாட்டுகள் முன்வைத்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பும் செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
”சட்டப்பேரவையின் தொடக்கத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவதுதான் வழக்கம். ஆனால், மரபை மீறி இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் இருமுறை பாடப்படவில்லை என்று கேள்வி எழுப்பினேன். இதற்கு எவ்வித பதிலும் கூறவில்லை.
நான் முதல்வன் திட்டம் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். அதை முடக்கியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதில் இல்லை. மின்வெட்டு குறித்த கேள்விக்கு சரியான பதிலளிக்காமல் திமுக மீது பழிபோட்டுள்ளார்கள்.
பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளின் போராட்டம் திமுக தூண்டுவிட்டுதான் நடக்கிறது என்று முதல்வர் கொச்சைப்படுத்தி உள்ளார்கள்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுக டிஜிபி நியமிக்கவில்லை எனக் கூறுகிறார். ஒரே நாளில் எல்லாத்தையும் கிழித்து எறிந்துவிடுவேன் எனக் கூறிதானே ஆட்சிக்கு வந்தீர்கள். 40 நாள்களில் உங்கள் காவல்துறை எதை கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வன்முறைகள். ஒரே நாளில் 24 சம்பவங்கள். ஆளுங்கட்சியினரே குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
யார் தயவிலும் ஆட்சி செய்யவில்லை என்கிறார். ஆனால், ஆட்சி அமைந்தவுடன் அதிமுகவின் ஒரு தரப்பினரை மட்டும் ஏன் சென்று பார்த்தீர்கள். முதலில் சோஃபா போனது, பின்னால் முதல்வர் போனார். ஒவ்வொரு கட்சித் தலைவரை சந்திக்க போகும்போதும் புது சோஃபா போனது.
அமைச்சர் அலுவலகத்திலேயே சென்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் வசனத்தை ஒப்பித்துவிட்டு போவது போன்று, இன்றைய உரையை முதல்வர் ஒப்பித்துவிட்டு சென்றுள்ளார்.
இசை வெளியீட்டு நிகழ்ச்சி, டிரைலர் நிகழ்ச்சி பாணியை கடைப்பிடிக்கிறார். சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர். இன்று விசில் அடிக்கிறார்கள், விரைவில் அமைச்சர்கள் பாடல் போட்டு நடனமாடுவார்கள்” எனத் தெரிவித்தார்.
An Assembly or a shooting spot? What exactly did you achieve in 40 days? Udhayanidhi lashes out!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.