கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!
கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது பற்றி...
கீழடி அறிக்கையில் இந்திய தொல்லியல் துறை மதிப்பீட்டுக் குழு குறிப்பிட்டிருந்தவாறு, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மூன்று கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. அதில், முதல் இரண்டு கட்ட அகழாய்வை இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்டார்.
அது குறித்த அறிக்கையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார். 982 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருள்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி, கீழடி நாகரிகம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அறிக்கை தாக்கல் செய்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே கீழடி அறிக்கையை சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதி சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், இந்திய தொல்லியல் துறைக்கு பதிலளித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, "அறிவியல்பூர்வமான தொல்லியல் சான்றுகளைக் கொண்டுதான் கீழடி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை" எனவும் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கும், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கும் இடையே மீண்டும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் நினைவுச்சின்னங்கள் & தொல்பொருள்கள் குறித்த தேசிய இயக்கத்தின் (NMMA) இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கீழடி ஆய்வு அறிக்கையில் அதன் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த திருத்தங்களைச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
2014–16 காலகட்டத்தில் கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை வழிநடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா, கிமு 800–500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு பழமையான நகரத் தமிழ் நாகரிகத்தின் சான்றுகளை கண்டறிந்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், ஏஎஸ்ஐ மேற்கொண்ட முக்கிய மதிப்பீட்டுக்குழு (critical evaluation) அந்த அறிக்கையை 'தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதிய விளக்கமற்றது' என விமர்சித்திருந்தது.
இதற்கு பதிலளித்த ராமகிருஷ்ணா, ஏஎஸ்ஐயின் மதிப்பீடு, துல்லியமற்றது; செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தோன்றுகிறது' என குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், மார்ச் 27-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், ஏஎஸ்ஐ, அவரது பதிலை மறுபரிசீலனை செய்து, அகழாய்வு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஏஎஸ்ஐ அகழாய்வு பிரிவு இயக்குநர் ஹெம்சாகர் ஏ. நாயக், ராமகிருஷ்ணா உடனடியாக இணக்க அறிக்கையை (compliance report) சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 17 அன்று நடைபெற்ற ‘நாடாளுமன்ற கேள்விகள்' தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முன் அறிவிப்பின்றி கலந்து கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால், 'கட்டாய உத்தரவுகளை மீறல், கடமையின்மை மற்றும் ஒழுங்கு மீறல்' ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ராமகிருஷ்ணாவுக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளது.
அந்த குறிப்பாணையில், 'உங்களது செயல்பாடு, திட்டமிட்ட கட்டுப்பாடு இன்மை, கடுமையான அலட்சியம் மற்றும் பணி ஒழுங்கு இல்லாமை எனப் பார்க்கப்படுகிறது. இது துறை சார்ந்த ஒழுங்கு விதிகளை மீறுவதாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் மத்திய குடிமைப் பணிகள் விதிகள் (1965) விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த நோட்டீஸுக்கு ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளதுடன், பதில் வராத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.