சிறுவனைக் கொன்று குழிதோண்டிப் புதைத்த 2 பள்ளி மாணவர்கள் கைது!
சிறுவனை அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டது பற்றி.
கோவை, இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற ஏழாம் வகுப்பு மாணவனை, அவனது சக நண்பர்களே பாட்டிலால் அடித்துக் கொன்று, சடலத்தை ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை, இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரது 13 வயது மூத்த மகன், ஆர்.ஜி. புதூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த அந்தச் சிறுவன், கடந்த 15-ஆம் தேதி பிற்பகலில் தனது நண்பர்கள் சிலருடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளான்.
ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்து உள்ளனர். அதற்கு அவர்கள், "யாரோ ஒரு மர்ம நபருடன் அவன் தனியாகச் சென்றான்" எனக் கூறி மழுப்பி உள்ளனர்.
Advertisement
Advertisement
இதனால் பயந்து போன பெற்றோர், உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சிறுவனைக் காணவில்லை என அவசரப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், சிறுவனுடன் கடைசியாகச் சென்ற சக சிறுவர்களைத் தனியே அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
போலீசாரின் தீவிர விசாரணையின் முடிவில், வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது சிறுவர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
ஆத்திரம் அடைந்த இரண்டு சிறுவர்கள், அங்கு இருந்த காலி மதுபாட்டிலால் அந்த மாணவனின் தலையில் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளான்.
இதனால் பயந்து போன அந்தச் சிறுவர்கள், மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக உடலை அங்கேயே ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்து விட்டு, வீட்டிற்கு வந்து உள்ளனர்.
சிறுவர்கள் காட்டிய அடையாளத்தின்படி, இன்று (மே 18) காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்காநல்லூர் போலீசார் புதைக்கப்பட்ட மாணவனின் உடலைத் தோண்டி எடுத்து மீட்டனர். பின்னர் உடல் கூராய்வுக்காக, சிறுவனின் உடல் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விளையாடச் சென்ற இடத்தில் சக மாணவர்களாலேயே ஏழாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட இந்தத் திடுக்கிடும் சம்பவம் இருகூர் பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்துக் கொலை வழக்குப் பதிவு செய்து உள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களிடமும் கொலைக்கான உண்மையான காரணம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
About the arrest of two school students who beat a boy to death and buried him in a pit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.