திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி
திருச்சியில் சிகிச்சையின்போது உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் சிகிச்சையின்போது உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் தொண்டைமான்நல்லூர் அருகேயுள்ள மணக்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் சேட்டு- கலைச்செல்வி தம்பதியின் மகள் சீதாலட்சுமி (21). திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார். அவரது மூக்கில் ஏற்பட்ட சதை வளர்ச்சியை, அறுவைச் சிகிச்சை செய்து அகற்றும் நோக்கில் சனிக்கிழமை காலை அங்கே சிகிச்சை நடைபெற்றுள்ளது.
அப்போது, எதிர்பாராத விதமாக சீதாலட்சுமி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தவறு செய்த மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை, சீதாலட்சுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நாள் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக உடற்கூறாய்வுக்குப் பிறகு சீதாலட்சுமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அரசு சார்பில் சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வீட்டிலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, மாநில தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பகலில் இறந்த சீதாலட்சுமியின் வீட்டுக்குச் சென்றனர்.
பெற்றோர் பெயரில் இலவச வீட்டுமனைக்கான பட்டா, சகோதரி புவனேஸ்வரிக்கு தற்காலிக அரசு வேலைக்கான ஆணை ஆகியவற்றையும் அமைச்சர் மற்றும் ஆட்சியர் ஆகியோர் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த விஷயத்தில் முதல்வர் ஜோசப் விஜய் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும், விசாரணைக் குழுவின் அறிக்கைப்படி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் தெரிவித்தார்.