முகப்பு
தமிழ்நாடு

யார் இந்த பைஜூஸ் ரவீந்திரன்! சாதனை முதல் சோதனைக்காலம் வரை!!

ஆறு மாதக் கால சிறைத் தண்டனை பற்றி என்ன சொல்கிறார் பைஜூஸ் ரவீந்திரன்

பைஜூஸ் ரவீந்திரன் - Center-Center-Chennai
பகிர்:

படிக்கும் பிள்ளைகளிடையே அதிகம் பிரபலமாகியிருந்த பைஜூஸ் நிறுவனம் தற்போது மோசமான தகவல்களுக்கான பிரபலமாகி வருகிறது. பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பைஜூஸ் ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்திருக்கும் நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய ரவீந்திரன், தன்னைச் சுற்றி கட்டமைக்கப்படும் பொய்யான மற்றும் ஒருதலைப்பட்சமான தகவல்களுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் நீதிமன்ற விவகாரத்தில், தன்னையும் மற்ற நிறுவனர்களையும் பற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் வகையில் தகவல்கள் வெளியாகி வருவது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில், என் தரப்பிலோ அல்லது மற்ற நிறுவனர்களின் தரப்பிலோ எந்தத் தவறும் நடக்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஏப்ரல் 2024 முதல், ரவீந்திரன் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பான பல நீதிமன்ற உத்தரவுகளை மீறியதைக் குறிப்பிட்டு, சிங்கப்பூர் நீதிமன்றம், அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

மேலும், அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடையவும், சட்ட செலவுகளுக்கு 90,000 சிங்கப்பூர் டாலர் செலுத்தவும், பீயார் இன்வெஸ்ட்கோ பிரைவேட் லிமிடெட் என்ற பெருநிறுவனத்தின் மீது ரவீந்திரனுக்கு உள்ள உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பைஜூஸ் ரவீந்திரன்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரனின் தந்தை இயற்பியல் ஆசிரியர், தாய் கணித ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர்கள் என்பதால், பள்ளி நேரத்தை முழுக்க முழுக்க விளையாட்டில் செலவிட்டு வந்த ரவீந்திரன், பிடெக் முடித்து பொறியாளராகப் பணியைத் தொடங்கினார்.

விடுமுறையில் சிஏடி தேர்வுக்கு தயாராகி வந்த தன்னுடைய நண்பர்களுக்கு உதவி செய்ய அவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தனர். அவரது நண்பர்கள் ரவீந்திரனை அதேத் தேர்வை எழுதச் சொன்ன போதும், போதுமான பயிற்சி இன்றி எழுதியும் ரவீந்திரன் 99 மதிப்பெண்கள் எடுத்தார். இது ஏதோ அதிர்ஷ்டத்தில் வந்ததா என்று சோதிக்க இரண்டாவது முறையும் அதே தேர்வை எழுத அதில் 100 மதிப்பெண்கள் எடுத்தார். இதனால், ஐஐஎம் கல்வி நிறுவனத்திலிருந்து அவருக்கு நேரடியாக அழைப்பு வந்தது.

இவரைப் பற்றிய தகவல்கள் வெளியாகி, ஹார்வர்டு வணிகப் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால், அவற்றை நிராகரித்துவிட்டார்.

இதனால், பெரிய நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பலரும் ரவீந்திரனின் ஆலோசனை பெறத் தொடங்கினர். இது அவரை பயிற்சிப் பாதையில் கொண்டு வந்தது.

2007ஆம் ஆண்டு பைஜூஸ் பயிற்சி மையத்தை நிறுவினார். தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க தொடங்கப்பட்டது, விளையாட்டு அரங்கம் அளவுக்கு வகுப்புகளை நடத்தும் அளவுக்கு உயர்ந்தார்.

நல்ல திறமையான ஆசிரியர்களைக் கொண்டு விடியோ மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளியிலிருந்து பல பொது நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாரானார்கள்.

கரோனா காலத்தில், மாணவர்கள் சேர்க்கை இரண்டு மடங்கு உயர்ந்தது. இதனால், வெளிநாடுகளிலிருந்து பைஜூஸ் நிறுவனத்துக்கு அந்நிய முதலீடுகள் குவிந்தன.

2016ஆம் ஆண்டு மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் நிதியைப் பெற்ற இந்தியாவின் ஒரே நிறுவனமான பைஜூஸ் இருந்தது.

2020ஆம் ஆண்டு சின்னசாமி விளையாட்டரங்கில் 25 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற வகுப்பை நடத்திக்காட்டினார்.

2013 - 2023 க்கு இடையில், பைஜு ரவீந்திரன் தனது நிறுவனம் மூலம் ரூ. 28,000 கோடி அந்நிய நேரடி முதலீட்டை (FDI) பெற்றுள்ளார். இது ஒரு இந்திய புத்தாக்க நிறுவனத்தால் பெறப்பட்ட மிக உயர்ந்த அந்நிய நேரடி முதலீடாகும்.

ஆனால், இந்த நிலை திடீரென மாறத் தொடங்கியது. ரவீந்திரன், தான் பெற்ற முதலீடுகளை, வெவ்வேறு நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்யத் தொடங்கிய போது பிரச்னை உருவானதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 1, 2024 அன்று, பைஜூஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மற்றும் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான கோரிக்கைகள் உட்பட, பல்வேறு பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்க ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பல பங்குதாரர்கள் வலியுறுத்தினர்.

இதன்பிறகு, இந்தியாவின் பொருளாதாரப் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை, ரவீந்திரனுக்கு எதிராக ஒரு தேடுதல் அறிவிப்பை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, பைஜூ தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து ரவீந்திரன் நீக்க பங்குதாரர்கள் வாக்களித்தனர். தொடர்ந்து பல சட்ட சிக்கல்களை பைஜூஸ் நிறுவனம் சந்தித்து, அதன் நிறுவனர் ரவீந்திரன் இன்று பல சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கை சந்தித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.