பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!
பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது பற்றி...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘பைஜுஸ்’ நிறுவனர் ரவீந்திரன் பைஜுவுக்கு எதிரான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 2024 முதல் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை ரவீந்திரன் பின்பற்ற தவறியதால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை முன்பு அவர் சரணடையவும், சட்டச் செலவுகளுக்காக இந்திய மதிப்பின்படி, ரூ. 67.50 லட்சம் அபராதம் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதேபோல், இந்த வழக்குடன் தொடர்புடைய நிறுவனமான ’பீயார் இன்வெஸ்ட்கோ பிரைவேட் லிமிடெட்’ மீது ரவீந்திரனுக்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமையை ஆதாரத்துடன் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நிதி முறைகேடு விவகாரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ரவீந்திரனுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்திருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் ரவீந்திரனால் ஏற்பட்ட ரூ. 11,500 கோடி கடனை ஈடுசெய்ய கடன் வழங்கியவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
தற்போது ரவீந்திரன் சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறேதும் நாட்டில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
‘பைஜுஸ்’ என்று பரவலாக அறியப்படும் பிரபல கல்விப் பயிற்சி நிறுவனத்தை நிறுவிய ரவீந்திரன், குறிப்பாக, 2011 முதல் 2023-ஆம் ஆண்டு வரை ரூ. 28,000 கோடி வரை அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றார். அதே காலகட்டத்தில், பல்வேறு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து வெளிநாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் ரூ. 9,754 கோடி வரை இந்த நிறுவனம் பெற்றது.
இந்த நிலையில், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகளை மீறி ரூ. 9,362.35 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பைஜுஸ் ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
சட்ட விதிகளை மீறி வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பி பைஜுஸ் முதலீடு செய்துள்ளது. பெறப்பட்ட மற்றும் முதலீடு செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் தொடா்பாக ஆவணங்களை அந்த நிறுவனம் சமா்ப்பிக்கத் தவறியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
இதுதொடர்பாக வழக்கு கா்நாடக உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து பங்குதாரர்கள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
Byju's Founder Raveendran Sentenced to 6 Months in Prison!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.