திருச்செந்தூர் கோயில் முறைகேடு: 3 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்செந்தூர் கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்செந்தூர் கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அமைச்சரிடமே பணம் வசூலித்த அர்ச்சகர் ஐயப்பன், கோயில் காவலாளிகள் கருப்பசாமி, தோப்பு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக கடந்த சில மாதங்களாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. அந்தப் புகார்களைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று (மே 29) அதிகாலை ஆய்வுப் பணிக்காகச் சென்றுள்ளார்.
அவர், திருச்செந்தூர் கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், காரை கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, உதவியாளருடன் கருப்பு நிற டி-ஷர்ட்டில், முகக்கவசம் அணிந்து கோயிலுக்குச் சென்றுள்ளார். தனது உதவியாளரை அனுப்பி, விரைவாக தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் விசாரிக்க கூறியுள்ளார். அப்போது, அமைச்சர் என்று தெரியாமல், விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி சண்முகவிலாச மண்டபம் வாசலில், தலைக்கு ரூ. 1,000 என அமைச்சருடன் சேர்த்து மொத்தம் 4 பேருக்கு ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
பணம் இல்லை எனக் கூறிய அமைச்சர், அர்ச்சகரின் ஜி-பே எண்ணுக்கு ரூ. 4,000 அனுப்பியுள்ளார். அமைச்சர் என்றே தெரியாத நிலையில், அந்த அர்ச்சகரை அமைச்சர் ரமேஷ் கையும், களவுமாக ஆதாரத்துடன் பிடித்துள்ளார். இந்த ஊழலில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் ஈடுபடுவதை தெரிந்துகொண்ட அமைச்சர், கோயில் அலுவலகத்தில் விளக்கக் கடிதம் எழுதி வாங்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், யாருக்கும் பாகுபாடு காட்டமாட்டோம் என்று அமைச்சர் ரமேஷ் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே பணம் வசூலில் ஈடுபட்ட அர்ச்சகர், இரண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் என மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். கோயிலில் உள்துறையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்கள் கருப்பசாமி, தோப்பு மற்றும் கோயில் அர்ச்சகர் ஐயப்பன் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அர்ச்சகர் ஐயப்பன் மறு உத்தரவு வரும் வரை கோயில் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.