அமைச்சர் ரமேஷிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள்!
திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள் அமைச்சர் ரமேஷிடமே லஞ்சம் வாங்கியது பற்றி...
திருச்செந்தூர் கோயிலுக்கு ஆய்வு செய்யச் சென்ற தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷை சிறப்பு தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல ரூ. 4,000 லஞ்சமாக அர்ச்சகர்கள் வாங்கியுள்ளனர்.
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அறநிலையத் துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் பொறுப்பேற்றார்.
இவர், அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு கோயில்களுக்குச் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
Advertisement
Advertisement
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், இன்று அதிகாலை அமைச்சர் ரமேஷ் ஆய்வுப் பணிக்காகச் சென்றுள்ளார்.
கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், காரை கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, உதவியாளருடன் முகக்கவசம் அணிந்து கோயிலுக்குச் சென்றுள்ளார்.
தனது உதவியாளரை அனுப்பி, விரைவாக தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் விசாரிக்க கூறியுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் என்று தெரியாமல் தலைக்கு ரூ. 1,000 என அமைச்சருடன் சேர்த்து மொத்தம் 4 பேருக்கு ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளனர். பணம் இல்லை எனக் கூறிய அமைச்சர், அர்ச்சகரின் ஜி-பேவுக்கு ரூ. 4,000 அனுப்பி, ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
இந்த ஊழலில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் ஈடுபடுவதை தெரிந்துகொண்ட அமைச்சர், கோயில் அலுவலகத்தில் விளக்கக் கடிதம் எழுதி வாங்கியுள்ளார்.
தொடர்ந்து, திருச்செந்தூர் கோயில் சொத்து, வருவாய் உள்ளிட்டவை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடைய நாளை பிற்பகல் ஆகும் எனத் தெரிகிறது.
தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக துறைச் செயலாளரிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.