தீபாவளிக்கு ஊர் செல்வோர் கவனத்துக்கு... சென்னையில் இன்றிரவு மழை பெய்யுமா?
தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் பற்றி...
தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து தமிழ்நாடு எல் நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மழை முன்னறிவிப்பு குறித்து பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
“கிழக்கு திசையிலிருந்து காற்று தடையின்றி வீசுவதால், இன்றும் தமிழகத்தின் உட்புற மாவட்டங்களிலும் தெற்கு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு நாள்களைப் போலவே, மிதமான மழையுடன் சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் உள்புறப் பகுதிகளில் திடீர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் (05.11.2026 காலை 8:30 மணி நிலவரப்படி), கோயம்புத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் உள்புறப் பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் உள்புறப் பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளிக்கு மழை பெய்யுமா?
தீபாவளி பண்டிகை (நவ. 8) அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.