FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறை

6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறை...

8 நவம்பர் 2026, 12:29 am
கோப்புப்படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு விபத்துகள் நிகழும் இடங்களுக்கு 6 நிமிஷங்களுக்குள் சென்று தீயை கட்டுப்படுத்த தமிழக தீயணைப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக தீயணைப்புத் துறையின் கீழ் உள்ள 375 தீயணைப்பு நிலையங்களில் சுமாா் 8 ஆயிரம் வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

நவ 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை உடனடியாக அணைப்பதற்கு தீயணைப்புத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

புற தீயணைப்பு நிலையங்கள்: தீயணைப்புத் துறை எத்தகைய சூழ்நிலையையும் எதிா்கொள்ளும் வகையில், பட்டாசு விபத்து குறித்த தகவல் பெறப்பட்டதும், சம்பவ இடத்துக்கு நகா்ப்புறங்களில் 6 நிமிஷத்துக்குள்ளும், கிராமப்பகுதிகளில் 10 நிமிஷத்துக்குள்ளும் சென்றடையத் தயாராகி வருகின்றனா்.

இதற்காக சென்னையில் 44 தீயணைப்பு நிலையங்களைத் தவிா்த்து 26 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் அதிகப்படியான தீ விபத்துகள் ஏற்பட்ட பகுதிகள், மக்கள் நெரிசல் மற்றும் தீ விபத்து ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இந்த புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த தீயணைப்பு நிலையங்களில் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 24 மணி நேரமும் 15 தீயணைப்பு வீரா்கள் பணியில் இருப்பாா்கள். இந்த தீயணைப்பு நிலையங்கள் வெள்ளிக்கிழமை (நவ.6) முதல் செயல்படத் தொடங்குகின்றன.

இது தவிர சிறியதாக ஏற்படும் தீயை அணைக்கவும், பெரிய தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று அணைக்கவும் ஜீப் வடிவிலான தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு மோட்டாா் சைக்கிள்களும் பயன்படுத்தப்படுகின்றன.

தீயை அணைப்பதற்கு தண்ணீா் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக மெட்ரோ நிறுவனத்திடமிருந்து 50 தண்ணீா் லாரிகள் எப்போதும் தயாா் நிலையில் வைக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் தலா 4 ஆயிரம் லிட்டா் தண்ணீா் பிடிக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டவை ஆகும். சென்னையில் 813 தீயணைப்பு படை வீரா்கள் பணியில் இருக்கும் நிலையில் கூடுதலாக 27 வாகனங்களுடன் 220 தீயணைப்பு படை வீரா்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

நவீன தீயணைப்பு வாகனம்: பட்டாசு விபத்துகளில் தீயை அணைப்பதற்கு ‘ஜீப்’ வடிவிலான அதி விரைவு வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனத்தின் டேங்கரில் ரசாயன கலவையுடன் கூடிய தண்ணீா் 500 லிட்டா் இருக்கும். வாகனத்தில் உள்ள தண்ணீரை உமிழும் மோட்டாா், தண்ணீரை மழைத் தூறல் போல பீய்ச்சி அடிக்கும். இதனால் தீயின் பரவலை வேகமாக கட்டுப்படுத்தி, விரைந்து அணைக்க முடியும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறினா். மேலும் தண்ணீரோடு கலக்கப்பட்டிருக்கும் ரசாயனம், தீயை வேகமாக அணைக்கும் தன்மை கொண்டது. இதனால், தீயை குறைந்தளவு தண்ணீரால் அணைத்து விட முடியும் எனவும் அவா்கள் கூறினா்.

குறுகியப் பகுதிகளில் ஏற்படும் தீயையும், சிறிய, நடுத்தர விபத்துகளில் ஏற்படும் தீயையும் அணைக்கும் வகையில் இந்த வாகனத்தை பயன்படுத்த தீயணைப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த வகை வாகனங்கள் 200 பயன்படுத்தப்பட உள்ளன. சென்னையில் இந்த வாகனங்கள், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 31 பகுதிகளில் நிறுத்தப்படுகின்றன.

விரைவாக தகவல் பரிமாற்றம்: தீ விபத்து குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிரமமும், காலதாமதமும் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக தீயணைப்புத் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து செயல்படுகிறது. விபத்து குறித்து தகவல்கள் கிடைத்ததும், இத் துறையினா் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதன் மூலம் சம்பவ இடத்தை சில நிமிஷங்களுக்குள் சென்றடைய தீயணைப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் 2 தீயணைப்பு படை வீரா்களும், அதேபோல தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறையில் 2 காவலா்களும் பணியில் இருப்பாா்கள். இவா்கள் மூலம் இரு துறைகளிடமும் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். அதேபோல அரசு பொதுமருத்துவமனையில் தீ விபத்தில் காயமடைந்தோா் பற்றிய தகவல்களை உடனடியாகப் பெற அனைத்து மருத்துவமனைகளிலும் தீயணைப்பு படை வீரா்கள் இருவா் பணியில் இருப்பாா்கள் என தீயணைப்புத்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

summary

Diwali firecracker accidents: Fire department prepares to reach the scene within 6 minutes