சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது பெய்யும் என்பது குறித்து...
சென்னையில் அடுத்த சுற்று மழை எப்போது பெய்யும் என்பது குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக இன்று (நவ. 9) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நவ. 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவ. 14 ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
நவ. 15-ல் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.