முதல்வர் விஜய், கட்சியினர் நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்! தமிழிசை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்துக்கு தமிழிசை கண்டனம்
முதல்வர் விஜய் இத்தகைய தங்களது கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி அதற்கு பெண் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனும் தவெக எம்எல்ஏவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது...
பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும்.. அவர்கள் மீது பார்வை என்பது தவறான கண்ணோட்டத்தோடு சிலரால் அணுகப்படுகிறது என்று நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது...
இத்தகைய கண்ணோட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.. இதில் உண்மை இருந்தால் உடனே யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.. கட்சி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
முதல்வர் விஜய் இத்தகைய தங்களது கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்... இத்தகைய நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.. மீறினால் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் நிச்சயமாக அப்படி நடக்கவில்லை என்கிறார்... எது உண்மை என்பது வெளிக்கொணரப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தன் மீது தவறான குற்றச்சாட்டு பரப்பப்படுவதாக எம்எல்ஏ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.