FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!

மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்த டி.கே. சிவகுமாரின் பேச்சுக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய்க்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து...

முதல்வர் விஜய் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்த டி.கே. சிவகுமாரின் பேச்சுக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய்க்கு அதிமுக செவ்வாய்க்கிழமை (நவ. 10) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

'காவிரியின் குறுக்கே அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' என்று கூறியுள்ள கர்நாடக மாநில முதல்வருக்கு பதில் அளிக்காமல் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசின் முதல்வர் ஜோசப் விஜய்யின் கூட்டணி அரசுக்கு கண்டனம்!

Advertisement

Advertisement

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்னையில் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது.

மேலும், 'பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது' என்ற நவம்பர், 1991-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து, 'கர்நாடக அரசு மேக்கேதாட்டு திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என்ற நமது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரும், பின்னரும் 25.2.2017, 27.2.2017, 4.9.2018, 8.10.2018 மற்றும் 22.11.2018 ஆகிய நாள்களில் பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாக சந்தித்தும், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினேன்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் "மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' என்று கூறியதாக, நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாத காலமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரைத் திறந்துவிட உத்தரவிட்ட பிறகும், கர்நாடக அரசு தொடர்ந்து அதனை நிறைவேற்றாததுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மேக்கேதாட்டில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக டி.கே. சிவகுமார் உண்மைக்கு மாறான தகவலை பரப்பி தமிழக மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறார்.

ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மையாக்கிவிடலாம் என்ற தத்துவத்தை கடைபிடிக்கும் கர்நாடக முதல்வருக்கு பதில் அளிக்க வக்கில்லாமல் வாய்மூடி, தமிழ் நாட்டின் உரிமைகளைக் காக்காமல் இருக்கும் கூட்டணி அரசின் முதல்வர் ஜோசப் விஜய்யின் செயல் கண்டிக்கத்தக்கதாகும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

summary

On Tuesday (Nov. 10), the AIADMK condemned Chief Minister Vijay for remaining a mere spectator instead of responding to D.K. Shivakumar’s remarks regarding the Mekedatu dam issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.