நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது: சர்ச்சைகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்!
கடந்த ஆட்சியிலும் தீபாவளி அன்று கொலைகள் நடந்ததாக தான் பேசியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்...
சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் அது கட்சிக்காரராக இருந்தாலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் எழுந்த புகார் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் பதில் அளித்தார்.
"யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுக்கு ஆளானால் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய்யின் ஆட்சியில் எந்த பாரபட்சமும் இருக்காது. சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் அது கட்சிக்காரராக இருந்தாலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "சட்டம் - ஒழுங்கை பொருத்தவரை, முன்பைவிட காவல்துறையினர் ரோந்து பணியை அதிகரித்திருக்கிறார்கள். ரௌடிகளை அடையாளம் கண்டு கைது செய்திருக்கிறார்கள். மக்களின் பாதுகாப்பை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் காரணமே போதைப் பழக்கம்தான். போதை ஒழிக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கு மேம்படுத்தப்படும்.
கடந்த ஆட்சியிலும் தீபாவளி அன்று கொலைகள் நடந்துள்ளதாக நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் மக்களுக்கு ஆறுதல் தராது என்பது உண்மை. நாங்கள் சொன்னதன் நோக்கம், இந்த ஆட்சியில் இன்னும் மேம்படுத்தப்படுகிறது என்பதே.
கடந்த காலங்களில் நடந்தது என்பதற்காக நாங்களும் அப்படியே விட்டுவிடுவோம் என்று அர்த்தமல்ல. கடந்த காலங்களில் நடந்த குற்றங்களைத் தடுப்பதற்காகவும்தான் வேலை செய்திருக்கொண்டிருக்கிறோம். முன்பைவிட காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம்.
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்து அவர்கள் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறார்கள். நாங்கள் ஒரு குற்றவாளியைக்கூட தப்பிக்க விடமாட்டோம்" என்று கூறினார்.
சர்ச்சை பேச்சு
முன்னதாக தீபாவளி அன்று 11 கொலைகள் நடந்திருப்பது குறித்து நேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், "கடந்த ஆண்டு தீபாவளி அன்று 6 கொலைகள், அதற்கு முந்தைய ஆண்டு 11 கொலைகள் நடந்திருக்கிறது. பண்டிகை காலங்களில் கொலைகள் புதிதல்ல. இபிஎஸ், கனிமொழி எல்லாரும் கடந்த ஆண்டுகளில் அமைதியாக இருந்தார்களா? இது காலம்காலமாக நடைபெறும் ஒன்றுதான். இதனைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கிறோம்" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.