அக்வான் புயல் அர்த்தம் தெரியுமா?
நவ. 16 ஆம் தேதி உருவாகும் அக்வான் புயலின் பெயருக்கு அர்த்தம் என்ன என்பது பற்றி..
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று நவ. 13-ஆம் தேதி உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவ. 16ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு "அக்வான்" என பெயர் சூட்டப்பட உள்ளது. அக்வான் என்ற பெயரை ஈரான் நாடு பரிந்துரைத்துள்ளது. அக்வான் என்றால் அசுரன் அல்லது தீய சக்தி என்று அர்த்தமாகும் எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. அதேசமயம் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியிருக்கிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 14-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவம்பர் 15- ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். புயலின் நகரும் திசையை பொறுத்தே அது கரையைக் கடக்கும் பகுதி தெரியவரும்.
மூன்றாவது புயல்
வடகிழக்குப் பருவமழை தொடங்கி மூன்றாவது புயல் இதுவாகும். முன்னதாக உருவான அர்னாப் மற்றும் முரசு ஆகிய இரு புயல்களும் ஆந்திரத்தை நோக்கிச் சென்றதால், தமிழகத்தில் அந்த அளவிற்குப் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஆந்திர மாநிலம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது.
புயலுக்குப் பெயர் சூட்டும் நடைமுறை
வங்கக் கடல், அரபிக் கடல் உள்ளிட்ட வடக்கு இந்தியக் கடலோரப் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 13 நாடுகளும் அவர்கள் தரப்பில் பெயர்களை அளித்து அவை ஒன்றன்பின் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டு, அடுத்தடுத்து தோன்றும் புயல்களுக்குப் பெயர் சூட்டப்படும்.
இந்த பெயர் சூட்டும் நடைமுறை 2004 ஆம் ஆண்டில் உருவானது. அப்போது இந்தியா, வங்கதேசம், மாலத் தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து என எட்டு நாடுகள் இதில் இடம்பெற்றிருந்தன. பிறகு 2018-ஆம் ஆண்டில் ஈரான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வமாக இதில் இணைந்தன.
காற்றின் வேகம் அதிகரிக்கும்
அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.