அக். 26-ல் உருவாகிறது அர்னாப் புயல்! பெயருக்கு அர்த்தம் என்ன? ஏற்கனவே கேட்டது போல இருக்கிறதா?
அக். 26ஆம் தேதி உருவாகும் அர்னாப் புயலின் பெயருக்கு அர்த்தம் என்ன என்பது பற்றி..
வங்கக் கடலில் இன்று அக். 23-ஆம் தேதி உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அக். 26ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும், அவ்வாறு புயலாக மாறினால் அதற்கு அர்னாப் என பெயர் சூட்டப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அர்னாப் என்ற பெயரை வங்கதேசம் வழங்கியிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா கொடுத்திருக்கும் முரசு இடம்பெற்றுள்ளது. அர்னாப் என்றால் வங்க மொழியில் கடல் என்று அர்த்தமாகும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
இது 26ஆம் தேதி புயல் சின்னமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அர்னாப் என பெயர் சூட்டப்படலாம் என்று கூறப்படும் நிலையில் பலருக்கும் இந்தப் பெயரை ஏற்கனவே கேட்டப் பெயராக இருக்கிறதே என்று தோன்றியிருக்கலாம்.
காரணம் இருக்கிறது, அதாவது கடந்த செப்டம்பர் மாதம் வங்கக் கடலில், வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருமாறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு அர்னாப் என பெயர் சூட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புயல் சின்னமாக வலுவடையாததால், அந்தப் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால், அப்போதே, அர்னாப் பெயர் வெளியாகியிருந்ததால்தான் பலருக்கும், தற்போது உருவாகும் புயலுக்கு என்னப் பெயர் சூட்டுவார்கள் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
புயலுக்கு பெயர் சூட்டும் நடைமுறை!
வங்கக் கடல், அரபிக் கடல் உள்ளிட்ட வடக்கு இந்திய கடலோரப் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 13 நாடுகளும் அவர்கள் தரப்பில் பெயர்களை அளித்து அவை ஒன்றன்பின் ஒன்றாக பட்டியலிடப்பட்டு, அடுத்தடுத்து தோன்றும் புயல்களுக்கு பெயர் சூட்டப்படும்.
இந்த பெயர் சூட்டும் நடைமுறை 2004ஆம் ஆண்டில் உருவானது. அப்போது இந்தியா, வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து என எட்டு நாடுகள் இதில் இடம்பெற்றிருந்தன. பிறகு 2018ஆம் ஆண்டில் ஈரான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வமாக இதில் இணைந்தன.
புயல் சின்னம்!
இன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை (அக். 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை மறுநாள் (அக். 25) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அக். 26 ஆம் மேற்கு - மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் என்றும் பின்னர் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒருவேளை இது புயலாக உருவானால் இது இந்த ஆண்டின் முதல் புயலாக இருக்கக் கூடும்.
இதனுடன், அக். 21-ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவி வருகிறது. அதன் காரணமாகவே, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Cyclone Arnab to form on Oct 26! What does the name mean? Does it sound familiar?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.