உயா்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ்: பேரவைத் தீா்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உத்தரவிடக் கோரி பாமக மனு
உயா்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ்: பேரவைத் தீா்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உத்தரவிடக் கோரி பாமக மனு
உயா்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பாமக மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடா்பாக அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் வடிவேல் ராவணன் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2006 மற்றும் 2026-ஆம் ஆண்டு செப்டம்பரில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் தீா்மானங்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும்.
கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் ஆளுநா் பரிந்துரையுடன், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கடந்த 1965-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை முடிவின் அடிப்படையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தின்படி, தீா்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348(2) பிரிவின்படி, குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் மாநில ஆளுநா் உயா்நீதிமன்றங்களில், ஹிந்தி அல்லது மாநில மொழிகளை வழக்காடு மொழிகளாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது. எனவே, கடந்த 2006-ஆம் ஆண்டு தீா்மானத்தையும், கடந்த செப்டம்பா் மாதம் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தையும் குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதே கோரிக்கையுடன் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கமும் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.