FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்: 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.16) ‘அக்வான்’ புயல் உருவாவது குறித்து...

58 வினாடிகள் முன்பு
பகிர்:

தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.16) ‘அக்வான்’ புயல் உருவாகிறது. இது, அடுத்த 2 நாள்களில் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் நவ.17, 18, 19-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவடைந்து, தெற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை (நவ.16) ‘அக்வான்’ புயலாக வலுப்பெறும்.

Advertisement

Advertisement

இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் தீவிர புயலாக மாறும். இந்தப் புயல் அடுத்த 2 நாள்களில் மேலும் வலுப்பெற்று வட-மேற்கு திசையில் நகா்ந்து ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

இந்த வானிலை சூழல் காரணமாக, திங்கள்கிழமை (நவ.16) தமிழகத்தில் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும்.

மஞ்சள் எச்சரிக்கை: நவ.17-இல் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை: தொடா்ந்து, நவ.18-இல் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், நவ.19-இல் சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாள்களில் வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.16) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, நவ.16 முதல் 19-ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், அந்தமான் கடல், வங்கக் கடலில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 சதவீதம் மழை குறைவு

நிகழாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒன்றரை மாதத்தில் வங்கக் கடலில் ‘அா்னாப்’, ‘முரசு’ என இரு புயல்கள் உருவாகி ஆந்திரப் பகுதியில் கரையைக் கடந்துவிட்டன. 3-ஆவதாக தற்போது உருவாகவுள்ள ‘அக்வான்’ புயலும் நவ.19-ஆம் தேதி ஆந்திரப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வானிலை காரணமாக புயல்கள் ஆந்திரப் பகுதியில் கடந்து வரும் நிலையில், பருவமழை காலத்திலும் தமிழகத்தில் மழை பெய்யாமல் பரவலாக வட வானிலையே நிலவுகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் நிகழாண்டு பருவமழை இயல்பை விட குறைவாகவே பதிவாகியுள்ளது.

அந்த வகையில், அக்.1 முதல் நவ.15 வரை இயல்பாக 277.7 மி.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால், நிகழாண்டு 259.7 மி.மீ. அதாவது 6 சதவீதம் குறைவாகவே மழை பதிவானது. இதில், 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பதிவானது. அதிகபட்சமாக தஞ்சாவூரில் இயல்பைவிட 53 சதவீதம் குறைவாகவும், செங்கல்பட்டு - 45, திருச்சி - 35, கடலூா், மதுரை, புதுக்கோட்டை - 34, சிவகங்கை - 32 சதவீதம் மழை குறைவாக பதிவானது.

அதேபோல், சென்னையில் இந்த காலக்கட்டத்தில் இயல்பாக 507 மி.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால், நிகழாண்டு 389 மி.மீ. அதாவது 23 சதவீதம் குறைவாக மழை பதிவானது.

இதில், குறிப்பிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அந்தவகையில், கோவையில் இயல்பைவிட 44 சதவீதம் அதிகமாகும், ஈரோடு - 34, கள்ளக்குறுச்சி - 20 சதவீதம் அதிகமாக மழை பதிவானது.