ஈஷா யோகா மையத்தில் தன்னார்வலர் காணாமல் போன வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!
ஈஷா யோகா மையத்தில் தன்னார்வலர் காணாமல் போன வழக்கின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்...
ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னார்வலர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை இக்கரை பொளுவம்பட்டியில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் தென்காசியைச் சேர்ந்த கணேசன் என்பவர் 2007-ஆம் ஆண்டு முதல் தன்னார்வலர்களாக சேவை செய்து வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென யோகா மையத்தில் இருந்து காணாமல் போயுள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக யோகா மையத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆலந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாததால், கணேசனை கண்டுபிடித்து தரக் கோரி அவரது சகோதரர், திருமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கணேசன் காணாமல் போன விவகாரத்தை விரைந்து விசாரித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஆலந்துறை போலீஸாருக்கு 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இதுவரை இந்த வழக்கு தொடர்பாக எந்த இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. தனது சகோதரரை இதுவரை கண்டுபிடிக்கவும் இல்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என திருமலை மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கில், ஆலந்துறை போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையில் மூன்று மாதங்களில் வழக்கின் புலன் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை முடிக்கவோ, இறுதி அறிக்கை தாக்கல் செய்யவோ காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், 12 வாரங்களில் விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.