FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்: பேரிடர் மேலாண்மை ஆணையம்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

25 வினாடிகள் முன்பு
அக்வான் புயல் கரையைக் கடக்கும் பாதை. - படம்: IMD
பகிர்:

வானிலை தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாட்டின் வானிலை நிலவரங்களைக் கண்காணித்து, புயல், மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை வெளியிடும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அமைப்பாகும்.

இந்த நிலையில், வானிலை தொடர்பான கணிப்புகளை வெளியிடும் சில தனிநபர்கள், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளிலிருந்து மாறுபட்ட தங்களது சொந்தக் கணிப்புகள் மற்றும் மதிப்பீடுகளை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாகப் பரப்பி வருவது கவனிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இத்தகைய தகவல்கள் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இதர செய்தி ஊடகங்களிலும் வெளியிடப்படுவதால், பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வானிலை தொடர்பான அறிவியல் கருத்துகள் மற்றும் சுயாதீனமான ஆய்வுகள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளுக்கும் தனிநபர்களின் சொந்தக் கணிப்புகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்வது அவசியமாகும்.

குறிப்பாக, புயல், கனமழை மற்றும் இதர தீவிர வானிலை நிகழ்வுகளின்போது, ஒன்றுக்கொன்று முரண்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, தொலைக்காட்சி, அச்சு மற்றும் இணையதள ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள் வானிலை தொடர்பான தகவல்களை வெளியிடும்போது பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

1. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

2. தனிநபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் வெளியிடும் வானிலை கணிப்புகளை அரசின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளாகக் கருதவோ, வெளியிடவோ கூடாது.

3. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகளிலிருந்து மாறுபட்ட தனிநபர்களின் கணிப்புகளை ஒளிபரப்புவதற்கு அல்லது வெளியிடுவதற்கு முன்பு, அவற்றின் நம்பகத்தன்மையை ஊடக நிறுவனங்கள் உரிய முறையில் சரிபார்க்க வேண்டும்.

4. சுயாதீனமான அறிவியல் மதிப்பீடுகள் வெளியிடப்படும்போது, அவற்றின் ஆதாரம் தெளிவாகக் குறிப்பிடப்படுவதுடன், அவை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

5. புயல், கனமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய பரபரப்பான செய்திகள், ஆதாரமற்ற கணிப்புகள் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வானிலை தொடர்பான தகவல்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் இயல்பு வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, இத்தகைய தகவல்களைப் பொறுப்புடனும் உண்மைத்தன்மையுடனும் வெளியிடுவது அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கடமையாகும்.

குறிப்பாக, பேரிடர் காலங்களில் தவறான மற்றும் முரண்பட்ட வானிலைத் தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும். எனவே, பொதுமக்களுக்கு சரியான, நம்பகமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்ய அனைத்து ஊடக நிறுவனங்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனவே, புயல், கனமழை உள்ளிட்ட வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிடும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Tamil Nadu State Disaster Management Authority has advised that the media should act responsibly when disseminating weather-related information and should rely solely on the official forecasts issued by the India Meteorological Department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.