போக்சோ வீரமணி வழக்கு! தொழிலதிபா் பிரகாஷ் முன்பிணை கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபா் பிரகாஷ் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவ.20-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபா் பிரகாஷ் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவ.20-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உதவியதாக, ரயில்வே தொழிற்சங்கத் தலைவா் கண்ணையாவின் மகன் தொழிலதிபா் பிரகாஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.
அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பித்தனா். இந்தநிலையில், தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில், தான் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், தனக்கு முன்பிணை வழங்கக் கோரி பிரகாஷ் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பிரகாஷ் தரப்பில் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி சுந்தா்மோகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அப்போது பிரகாஷ் தரப்பில், இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதைஏற்று விசாரணையை நவ.20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.