FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எனக்கு சொந்தக் கார் ஏதுமில்லை! நீதிபதி விமர்சனத்துக்கு சு. வெங்கடேசன் பதில்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் விமர்சனத்துக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதில்...

சு. வெங்கடேசன் எம்பி - கோப்புப் படம்
பகிர்:

எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் விமர்சனத்துக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் நவ. 11 ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஜி.ஆர். சுவாமிநாதன், "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்.” அப்போதுதான் அந்த பாவம் போகும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

நீதிபதி சுவாமிநாதனின் கருத்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், “நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பெரியார் அறிவுலக ஊழல் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்தபோது பேசிய நீதிபதி சுவாமிநாதன், “சில நாள்களுக்கு முன்பு மதுரை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது உயர் ரக காரில், ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கினார். அது கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன். ரயிலில் சு. வெங்கடேசன் முதல் வகுப்புக்கு சென்றார். நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான சு. வெங்கடேசன் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்” என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து செவ்வாய்க்கிழமை சு. வெங்கடேசன் பதிவிட்டிருப்பதாவது:

“ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது.

நான் ரயில் நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன்.

இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.

அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம்.

முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.

இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது.

நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.

இக்கேள்வி "தூய்மை மற்றும் எளிமை" எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும் போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது எல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம்.

ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

I do not own a car to this day! Su. Venkatesan responds to the judge's criticism!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.