அயனாவரம் பேருந்து நிலையம் எதிரே ஆறாக ஓடும் கழிவுநீர்! நடவடிக்கை எடுக்குமா குடிநீர் வாரியம்?
அயனாவரம் பேருந்து நிலைய அலுவலகம் எதிரே கழிவுநீர் ஆறாக ஓடுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்து...
சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் அயனாவரம் பேருந்து நிலைய அலுவலகம் எதிரே கழிவுநீர் ஆறாக ஓடுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதனை சீர் படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் அயனாவரம் பேருந்து நிலைய அலுவலகம் எதிரே சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கடை வியாபாரிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அயனாவரம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பேருந்துப் பயணிகள், இந்த சாலையில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கழிவு நீர் தெறிப்பதால், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு, தொற்றுநோய்கள் பரவும் அபாய நிலையும் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி அயனாவரம் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்களும் வியாபாரிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.
மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையம் போன்ற முக்கியமான இடங்களிலேயே கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுவது அந்த பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது குறித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைமை அலுவலக உயரதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதுடன், கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அந்த பகுதி மக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.