கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவு! தலைவர்கள் இரங்கல்!
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்...
கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு கடந்த செப். 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, சுமார் 70 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வி.எஸ். பாபு இன்று (நவ. 20) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வி.எஸ். பாபுவின் மறைவுக்கு அதிமுக, பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி, தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,
“கொளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,
“கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைவுக்கு இரங்கல். தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
70 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்,
“தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறி சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!” எனத் தெரிவித்துள்ளார்.
Leaders of various political parties have expressed their condolences on the passing of Kolathur Assembly constituency member V.S. Babu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.