கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவு: அமைச்சர் அருண்ராஜ் இரங்கல்
கொளத்தூர் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுக்கு அமைச்சர் அருண்ராஜ் அஞ்சலி செலுத்தியது குறித்து...
கொளத்தூர் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுக்கு அமைச்சர் அருண்ராஜ் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 70 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை (நவ. 19) மதியம் 2.24 மணியளவில் வி.எஸ். பாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலுக்கு முதல்வர் விஜய் உள்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வி.எஸ். பாபுவின் உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு நம்மை விட்டுப் பிரிந்திருப்பது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. அனைவரிடமும் அன்பாகவும், இயல்பாகவும், உரிமையுடனும் பழகக்கூடிய சிறந்த பண்பாளர் அவர். அவரது அரசியல் பயணம் மிகவும் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்திருப்பது வருத்தமளிக்கிறது.
அவருடன் தொடர்புடைய நினைவுகளும், அரசியல் அனுபவங்களும் மிகவும் சுவாரசியமானவை மட்டுமின்றி ஆச்சரியமளிக்கக்கூடியவை. அவரது உடல்நலக் குறைவு காரணமாக சிறந்த மருத்துவக் குழுவினர் ஒருங்கிணைந்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அமைச்சரின் உத்தரவின்பேரில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் தனியார் மருத்துவமனைக்கே நேரில் சென்று அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்கினர். மேலும், முதலமைச்சரும் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து நாள்தோறும் கேட்டறிந்து வந்தார்.
இன்னும் இரண்டு, மூன்று நாள்களில் அவர் குணமடைந்து வீடு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
வி.எஸ். பாபுவின் குடும்பம் மிகப்பெரிய கூட்டுக் குடும்பமாகும். அவரது மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, அரசியல் நண்பர்கள், தோழர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தோழர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.