ரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
ரயிலில் பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து...
நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாகா்கோவில், கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் நவ. 18-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரயிலைத் தூய்மை செய்யும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டபோது மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது.
அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணை கொலை செய்தவர் ஐயப்பன் (31) என்பவர்தான் எனத் தெரியவந்தது.
கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரைச் சோ்ந்த அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா் நவ. 14-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் 5-ஆவது நடைமேடையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத பெண்ணை ஆள்நடமாட்டமற்ற மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொடூரமாகத் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஐயப்பனை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து 7 நாள்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டிக்குள் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து ஊடக அறிக்கையை தேசிய மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. சம்பவம் நடந்து 4 நாள்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து முழுமையான மற்றும் காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தவும், சாத்தியமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் கோரி, தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணை விரைவாக அடையாளம் காணவும், அவரது குடும்பத்தினரைக் கண்டறியப்பட வேண்டும். ரயில் நிலைய பாதுகாப்பு குறித்து விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும். ரயில்வே வளாகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து இடங்களில் பெண்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது.
சம்பவம் குறித்து 7 நாள்களுக்குள் விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை மகளிர் ஆணையம் கோரியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.