இந்திய பட்டு பாரம்பரியத்தைப் பறைசாற்றும் 'சில்க் மார்க்' கண்காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்!
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சில்க் மார்க் அமைப்பு சென்னையில் ’சில்க் மார்க்’ கண்காட்சியை நடத்தவுள்ளது.

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சில்க் மார்க் அமைப்பு சென்னையில் நாளை (நவ. 23) முதல் 5 நாள்கள் ’சில்க் மார்க்’ கண்காட்சியை நடத்தவுள்ளது.
இதனை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கி வைக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பட்டு வாரியத்தின் ஓர் அமைப்பான இந்திய சில்க் மார்க் அமைப்பு, சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நாளை (2026 நவம்பர் 23) முதல் 27-ம் தேதி வரை ஐந்து நாட்கள் 'சில்க் மார்க்' கண்காட்சியை நடத்தவுள்ளது.
Advertisement
Advertisement
இந்தக் கண்காட்சியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தியப் பட்டின் சிறப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், 'சில்க் மார்க்' தர முத்திரை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
சர்வதேச பட்டு வளர்ப்பு ஆணையத்தின் (ஐஎஸ்சிசி-2026) 27-வது மாநாட்டை ஒட்டி நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், 23-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சர்வதேசப் பிரதிநிதிகள், இந்திய பட்டு உற்பத்தித் துறையினர் பங்கேற்கவுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் செழுமையான பட்டுப் பாரம்பரியம் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்படும்.
மத்திய பட்டு வாரியத்தின் சிறப்புக் கண்காட்சி அரங்கில், பட்டுப்புழு வளர்ப்பு முதல் பட்டுத் துணி தயாரிப்பு வரையிலான செயல்முறைகள் காட்சிப்படுத்தப்படும். பட்டுப்புழுக்கள், பட்டு உபபொருட்கள் குறித்த நேரடி விளக்கங்களும் இடம்பெறும். இந்தியாவின் நான்கு முக்கியப் பட்டு வகைகளான மல்பெரி, தசார், ஏரி, மூகா ஆகியவற்றின் சிறப்புகளையும் பார்வையாளர்கள் இதில் அறிந்துகொள்ளலாம். இந்தியாவில் சுமார் 7,500 சில்க் மார்க் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,700 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 20 அரங்குகளுடன் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் ஆர்எம்கேவி சில்க்ஸ், போத்தீஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், பட்டு தொழில்முனைவோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். பாரம்பரிய, நவீன வடிவமைப்புகளிலான பட்டுப் புடவைகள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பட்டுப் பொருட்களைப் பார்வையிடவும் வாங்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
இளம் தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், நவீன ஆடை வடிவமைப்புகளில் இந்தியப் பட்டு ஜவுளியின் பயன்பாடு இக்கண்காட்சியில் எடுத்துக்காட்டப்படும். இதன் மூலம் உள்நாட்டு நெசவாளர்கள், கைவினைஞர்களுக்கு ஆதரவு அளிக்க இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
உண்மையான பட்டுத் துணியை அடையாளம் காணுதல், சில்க் மார்க் முத்திரையிட்ட பொருட்களை வாங்குவதை ஊக்குவித்தல், உள்நாட்டு, சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இக்கண்காட்சியின் முக்கிய நோக்கங்களாகும். சர்வதேசப் பிரதிநிதிகள், தொழில்துறையினர், விற்பனையாளர்கள், பட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.