மயிலாடுதுறை மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான சீர்காழி பகுதிகளுக்கு போதிய அளவு வந்து சேராத நிலை குறித்து...

சீர்காழி அருகே மழையும், காவிரி நீரும் இல்லாததால் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து பயிர்களுக்குத் தெளிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள், மயிலாடுதுறை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் வட்டாரங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான சீர்காழி பகுதிகளுக்கு போதிய அளவு வந்து சேராத நிலையில் குருவை சாகுபடி பொய்த்து போனதால் கவலை அடைந்த விவசாயிகள் அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
பருவ மழை மற்றும் பாசன வாய்க்கால் தண்ணீரை எதிர்பார்த்து சம்பா சாகுபடி நடைபெற்ற நிலையில், பருவ மழையும் பொய்த்ததாலும், காவிரி நீர் வந்து சேராததாலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குமாரநத்தம், எருமல், பனமங்கலம், எடகுடி வடபாதி, புங்கனூர், கரைமேடு, காரைமேடு, அண்ணன் கோயில், மேலச்சாலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது.
கடன் வாங்கி சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் குமாரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பயிரை காப்பாற்றிட குடம் மற்றும் வாளிகளில் தண்ணீரை பிடித்து வந்து வயலில் தெளித்து பயிரைக் காப்பாற்றும் கடைசி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
இந்தச் சம்பவம் அந்த பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்குத் தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.