முகப்பு

காவிரி நீரையும் பெற்றுத்தரவில்லை; விவசாயிகளின் துயரத்தையும் துடைக்கவில்லை: டிடிவி தினகரன்

தவெக அரசு காவிரி நீரையும் பெற்றுத்தரவில்லை என்றும் விவசாயிகளின் துயரத்தையும் துடைக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி...

41 வினாடிகள் முன்பு
காவிரி நீரையும் பெற்றுத்தரவில்லை; விவசாயிகளின் துயரத்தையும் துடைக்கவில்லை: டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
பகிர்:

தவெக அரசு காவிரி நீரையும் பெற்றுத்தரவில்லை என்றும் விவசாயிகளின் துயரத்தையும் துடைக்கவில்லை என்றும் அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், காவிரி நீரையும் பெற்றுத்தரவில்லை; விவசாயிகளின் துயரத்தையும் துடைக்கவில்லை - கண்ணீர் வடிக்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது தவெக அரசு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி வரும் நிலையில், அவற்றைப் பாதுகாக்க குளங்களில் தேங்கியிருக்கும் நீரைக் குடம் குடமாக எடுத்துவந்து வயல்களில் தெளிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

காவிரியிலிருந்து தமிழகத்திற்கான உரிய நீரைக் கேட்டுப் பெறத் திராணியற்ற, மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்க முடியாத குதிரைபேர மாடல் தவெக அரசால், விவசாயிகள் தங்களின் உயிராகக் கருதும் விளைநிலங்கள் பாலைவனத்தைப் போல வெடித்துக் காணப்படுவதோடு, உயிரைக் கொடுத்து விளைவித்த நெற்பயிர்களும் கருகிக் காய்ந்து, ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளதைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

பொய்த்துப்போன பருவமழை, வறட்சி, இதுவரை இல்லாத அளவிற்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு, உரங்கள் மற்றும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு எனப் பல்வேறு சவால்களையும் தாண்டி விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் தற்போது தண்ணீரின்றிக் கருகுவதைத் தடுக்குமாறு முறையிட்ட விவசாயிகளிடம், ஸ்பிரே (Spray) மற்றும் டானிக்கைத் (Tonic) தெளிக்குமாறு அதிகாரிகள் பதில் அளித்திருப்பதாக சொல்லப்படுவது, விவசாயிகளை விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வெளியேறச் சொல்வதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

கர்நாடகத்திடம் காவிரி நீரைக் கேட்டுப் பெற முடியவில்லை; மேகேதாட்டுஅணை கட்டும் முயற்சியையும் தடுக்க முடியவில்லை; டெல்டா விவசாயிகளின் கண்ணீரையும் துடைக்க முன்வரவில்லை. இப்படித் தமிழகத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் ஒவ்வொன்றாகக் காவு கொடுத்துக் கொண்டிருப்பதுதான் தவெக அரசு கொண்டு வந்ததாகக் கூறும் மாற்றமா?

எனவே, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு இழைத்த துரோகத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் விவசாயிகளை மேலும் துயரப்படுத்தாமல், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசையும், முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன் என்று தெவித்துள்ளார்.

summary

AMMK General Secretary TTV Dhinakaran has alleged that the TVK government has neither secured Cauvery water nor alleviated the distress of farmers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.