முகப்பு

உச்சநீதிமன்ற நீதிபதியையே ஏமாற்றிய தவெக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பாக தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியையே ஏமாற்றிய தவெக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றாமல் உச்சநீதிமன்ற நீதிபதியையே தவெக அரசு ஏமாற்றி விட்டதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, பாஜகவினர் உள்பட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் திருப்பரங்குன்றம் அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்தப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவின் உச்சநீதிமன்றம் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கி, ஒரு வார காலத்திற்குள் என்ன நடந்தது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த பிறகும்கூட, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கொஞ்சம் கூட அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எந்தவித அறிவுறுத்தலும் வழங்கவில்லை.

இன்று உயர்நீதிமன்றத்தில் அதே வழக்கில் நீதிபதி தெளிவாக தன்னுடைய தீர்ப்பில சொல்லி இருக்கிறார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் நாங்கள் குறுக்கிடவோ எதுவும் செய்யவோ முடியாது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை எங்களால் பார்க்க முடியும். பார்க்க வேண்டும். அதே நேரம், காலை தேவையின்றி யாரையெல்லாம் கைது செய்தார்களோ, அத்தனை பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

நீதிபதி அவ்வாறு சொன்ன பிறகும் கூட, நீதிமன்றத்தில் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லிட்டு, அதன் பின் பிள்ளையார் கோவிலில் ஏதோ தீபத்தை ஏற்றிவிட்டு, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றுகிறார் என்றால், அந்த உச்சநீதிமன்றத்தையே ஒரு கிள்ளுக்கீரையா நினைக்கிறாரா?

சின்னப் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுகிற மாதிரி, உச்சநீதிமன்ற நீதிபதியையும் ஏமாற்றியிருக்கின்றனர். உயர்நீதிமன்ற நீதிபதியையும் ஏமாற்றியிருக்கின்றனர்.

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? இதற்கு மேலும் இந்த அதிகாரம் இவர்களுக்கு இருக்க வேண்டுமா? இந்த அதிகாரம் இவர்களுக்குத் தொடர வேண்டுமா? இந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் பதவியில் நீடிக்க வேண்டுமா?

என்னைப் பொறுத்தவரை அவருக்கு இனிமேல் எந்த பதவி உயர்வும் கொடுக்கக்கூடாது. அதே மாதிரி காவல்துறை அதிகாரிகளுக்கும் எந்த பதவி உயர்வும் இனி கொடுக்கக்கூடாது. நீதிமன்றத்தில் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து, அதை நிறைவேற்றாவிட்டால், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை நீதிபதிகள் தான் தீர்மானம் செய்ய வேண்டும்.

ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய பிறகும் ஒரு சீராய்வு மனுவைக் கொண்டு செல்கிறோம் என்றால், பெரும்பான்மை ஹிந்து சமுதாய மக்களுடைய எண்ணங்களை இது வேதனைப்படுத்துகிறது. பெரும்பான்மை ஹிந்து சமுதாய மக்களுடைய எண்ணங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஒரு முதல்வர் இந்த நாட்டிற்கு தேவையா என்பதுதான் என்னுடைய கேள்வி. மேல்முறையீடு என்பது இனிமேல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன சொல்லுகிறார்களோ, அதைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் எடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

summary

TVK government deceived even a Supreme Court judge: Nainar Nagendran's allegation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.