முகப்பு

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை குறித்து...

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலைமேல் தீபத்தூண் பகுதியில் தடுப்புகள் அமைத்து குவிக்கப்பட்டுள்ள போலீசார்.
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றத்தில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை திருநாளில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என தொடரப்பட்ட 3 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.

தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், மதியம் 2.30 மணியளவில் உத்தரவு வாசித்தது.

Advertisement

Advertisement

கார்த்திகை மாதம் முடிவடைவதற்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் ஒரு முறை தீபம் ஏற்றப்பட வேண்டும் என மனுதாரர் கோரினர்.

தொடர்ந்து, மனுக்களை விசாரித்த நீதிபதி அமர்வு தெரிவித்ததாவது, நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருந்தது கடும் வேதனையை அளிக்கிறது.

நீதிமன்ற உத்தரவுகள் மெத்தனமாகக் கையாளப்படும்போது, அதனைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இத்தகைய சூழ்நிலைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இல்லையெனில், அது அரசியலமைப்பு சார்ந்த குழப்பத்துக்கு வழிவகுக்கும். நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படும்போது, எங்களால் செயலற்று அமர்ந்திருக்க முடியாது. எந்தவொரு அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது.

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடே உயர்ந்ததாகும். நீதித் துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்படாது.

இந்திய ஆட்சிப் பரப்புக்குள் உள்ள அனைத்து சிவில் மற்றும் நீதித் துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்துக்கு துணைநின்று செயல்பட வேண்டும். நீதித் துறைக்கு சிவில் அதிகாரிகள் துணை நிற்பதை பிரிவு 144 உறுதி செய்கிறது.

மதுரையில் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் நிர்வாகச் சீர்குலைவை வெளிப்படுத்துகிறது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அதிகாரிகள் மீதான அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தெளிவாகின்றன என்று தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாதற்கான பழியை கோயில் நிர்வாகத்தின் மீது மதுரை ஆட்சியர் சுமத்த முயற்சிப்பதாகக் கூறிய நீதிபதிகள், ஆட்சியரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என மனுவை நிராகரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.