முகப்பு

திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட தீபம்! பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்!!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

52 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட தீபம்! பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்!!
திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட தீபம்! - dps
பகிர்:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டதையொடடி பட்டாசு வெடித்து ஹிந்து அமைப்பினர் மற்றும் மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகவும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகவும் விளங்கும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் அதன் வழிகாட்டுதலின்படி இன்று (நவம்பர் 28) சரியாக மாலை 5 மணியளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

கடந்த சில நாள்களாகப் பல்வேறு சர்ச்சைகள், சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல் விவாதங்களுக்கு மையமாக இருந்த திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இன்று தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில நாள்களாகப் பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டதுடன், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும் உத்தரவிட்டனர்.

மேலும், திருக்கோயில் அறங்காவலர் குழுவின் செயல்பாடுகளை இடைநிறுத்தி, கோயில் நிர்வாகத்தை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரை நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமித்தனர்.

13 பேர் கொண்ட வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், மத்திய ரிசர்வ் காவல் படை உயர் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் ஸ்தானிக பட்டர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினரின் கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புக்குப் பிறகு தீபம் ஏற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

130-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு!

தீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி கோயம்புத்தூரில் இருந்து வரவழைக்கப்பட்ட 130-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையின் விரைவு அதிரடிப் படையினர் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மலை அடிவாரம், மலைக்குச் செல்லும் பாதைகள், மலை உச்சி மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தீபம் ஏற்றுவதற்காக கோயில் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் உரிய அனுமதி பெற்ற 50 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். மற்ற மக்கள் மற்றும் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படவில்லை.

தீபத்தூணில் சரியாக மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது!

இதனைத் தொடர்ந்து, மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மரப்பலகைகள் மற்றும் கட்டைகள் கொண்டு அமைக்கப்பட்ட சாரம் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, இன்று சரியாக மாலை 5 மணியளவில் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதன் மூலம் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து வந்த சட்டப் போராட்டங்கள் மற்றும் சர்ச்சைகளுக்குப் பிறகு, மலை உச்சி தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

பட்டாசு வெடித்து ஹிந்து அமைப்பினர், மக்கள் கொண்டாட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, மலையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஹிந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்று உற்சாகமாகக் கொண்டாடினர்.

கடந்த சில நாள்களாகத் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஹிந்து அமைப்பினர் மற்றும் முருக பக்தர்கள், தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எதிர்ப்புப் போராட்டங்களும் பலத்த பாதுகாப்பும்!

இதற்கிடையே, தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை தமிழ் சங்கம் முன்பாக மத நல்லிணக்கக் கூட்டமைப்பு, மக்கள் நல இயக்கங்கள் மற்றும் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் மௌனப் போராட்டம் நடைபெற்றது.

மேலும், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ஒருபுறம் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் உரிய சோதனைகளுக்குப் பிறகு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மறுபுறம் தீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி மருத்துவத் துறை சார்பில் 16 மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ் மற்றும் நான்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகள், நீதிமன்ற நடவடிக்கைகள், போராட்டங்கள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், இன்று மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹிந்துத்துவ அமைப்பினர் மற்றும் மக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதால், திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

summary

A lamp was lit atop the Tirupparankundram hill! Celebrations erupted with the bursting of firecrackers!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.