ஊரக வளா்ச்சித் துறையிடம் ரூ.22 கோடி ஆன்லைன் மோசடி: மேலும் 5 பேர் கைது
தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22.30 கோடி ஆன்லைன் மோசடி வழக்கு பற்றி...
தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22.30 கோடி ஆன்லைன் மோசடி செய்யப்பட்ட வழக்கில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசின் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானிய நிதி, கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகா் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் தனி வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் 12 முதல் 30-ஆம் தேதி வரை சைபா் மோசடி கும்பல் வங்கிக் கணக்கில் அத்துமீறி நுழைந்து, 46 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.22.30 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, பணத்தை அபகரித்தனா். இதற்கிடையில், இந்த மோசடி தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அந்தப் புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், தகவல் தொழில்நுட்பச் சட்டம், மோசடி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனா். இந்த வழக்கில் சென்னை, பெங்களூரு, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது மேலும் 5 பேரைக் காவல்துறை சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் கைதானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.