தொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்
தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியது பற்றி...
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால் ஒட்டுமொத்த தமிழர் கலாசாரத்துக்கே அச்சுறுத்தலாக அமையும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், மமதா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது, "தொகுதி மறுவரையறை, ஒட்டுமொத்த நாட்டையும் தென் மாநிலங்கள் மட்டுமின்றி, குறிப்பாக தமிழ்நாட்டையும் வெகுவாக பாதிக்கும்.
Advertisement
Advertisement
இந்த மசோதாவால் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக உயர்த்தப்படுவதுடன், காலியாகும் இடங்களெல்லாம் பாஜகவுக்கே செல்லும். இது இந்திய அரசியலமைப்பையே மாற்றிவிடும். இதனை அஸ்ஸாம், ஜம்மு - காஷ்மீரில் சோதனை நடத்திய பாஜக, தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிலும் செயல்படுத்த முயல்கிறது.
இதனால்தான், தொகுதி மறுவரையறையை பாஜக செயல்படுத்த விடக் கூடாது என தமிழ்நாட்டின் பாதுகாவலரான சகோதரர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தினோம்.
தமிழர் விரோத சக்தியான ஆர்எஸ்எஸ், தமிழர்களையும் மொழி, கலாசாரம் வெறுப்பதுடன், அவர்களைக் கட்டுப்படுத்தவும் முயல்கிறது.
ஒருவேளை மக்களவையில் 850 இடங்களை பாஜக கொண்டுவந்தால், அத்துடன் இந்திய அரசியலமைப்பு முடிந்து விடும். அதுமட்டுமின்றி, தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாசாரத்தின் மீதான தாக்குதலையும் தொடங்கி விடுவர்.
இந்த மசோதாவானது தமிழ்க் கலாசாரம், தமிழ் மக்கள், மொழி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என மு.க. ஸ்டாலினிடம் எடுத்துரைத்தோம்" என்று தெரிவித்தார்.
இருப்பினும், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவில் உறுதியுடன் இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.