FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் விஜய் ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு: இபிஎச் கடும் விமர்சனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது பற்றி...

8 அக்டோபர் 2026, 5:41 pm IST
முதல்வர் விஜய் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் தவெக ஆட்சியில் கடந்த 5 மாதங்களிலேயே சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தவெக அரசு மீது குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தவெக அரசின் முதல்வர் விஜய் நடித்த திரைப்படங்களில் வருவதுபோல கொலை வெறிக் காட்சிகள், வன்முறை வெறியாட்டங்கள் தற்போது தமிழகத்தின் வீதிகள்தோறும் நடந்தேறி வருகிறது. சாலைகளில் மழை, வெள்ளம் ஓடுகிறதோ, இல்லையோ, இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.

  • வடமாநிலத் தொழிலாளி கொலை (வேளச்சேரி)

    Advertisement

    Advertisement

  • பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் வெட்டிக் கொலை (ஓமலூர்) மற்றும் தனியாக வசித்த மூதாட்டி, நகைகளுக்காக வெட்டிக் கொலை (கிச்சிப்பாளையம், சேலம்)

  • திருட்டு பைக் விற்று வந்த பணத்தை பிரிப்பதில் தகறாறு ஏற்பட்டு கொலை (திருத்தணி)

  • சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை (திண்டுக்கல்)

  • நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிவிட்டு வெளியே வந்தவர், பட்டப் பகலில் படுகொலை (திருநெல்வேலி)

  • இரயில் நிலையத்தில் மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் (எண்ணூர்)

  • தன்னுடைய மகள் மீது நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் முயற்சி குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தை படுகொலை (சென்னை)

  • டாஸ்மாக் அருகே கொலைகள் (சமயநல்லூர், சோழவந்தான்)

தினசரி செய்தித் தாள்களை படித்தாலோ, காட்சி ஊடகங்களைப் பார்த்தாலோ இப்படிப்பட்ட செய்திகள்தான் அதிகம் வருகின்றன; கண்ணில் படுகின்றன.

மயிலாடுதுறையைச் சேர்ந்த இளம் பெண்ஒருவர், தன் கணவருடன் தனிமையில் இருந்த விடியோக்களை கணவரே வெளியிட்டது குறித்தும்; மேலும் தன் கணவனுக்கு சுமார் 27 பெண்களுடன் தகாத உறவு இருந்தது குறித்தும் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தால், அதை காவல்துறை ஏற்க மறுத்ததுடன், தன்னை மிரட்டியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு செய்துள்ளார். இச்சம்பவம் அந்தப் பெண்ணுக்கு திருமணமான பதினைந்தே நாளில் நடந்திருக்கிறது என்பதுதான் கொடுமையின் உச்சம்.

நேற்றுகூட தலைநகர் சென்னை, திருவொற்றியூரில் 6 வயது வடமாநில சிறுமியை இளைஞர்கள் சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வந்த செய்தி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. குதிரை பேர ஆட்சியில் சிங்கப் பெண்கள் படை என்பது ரீல்ஸ் என்பதையே தினமும் நடக்கும் பாலியல் குற்றங்கள் அம்பலப்படுத்துகின்றன. வீட்டுக்கு வீடு விஜய் இருக்கிறார்; அண்ணனாக பாதுகாப்பு கொடுப்பேன் என்று டயலாக் பேசுவது மட்டும் போதாது. நிஜமாகவே நல்லாட்சி கொடுப்பதற்கு தெம்பும், திராணியும், வேலை வாங்கும் திறமையும் தேவை. இந்த லட்சணத்தில்தான், தவெக அரசின் முதல்வர் விஜய் ஆட்சியில், கடந்த 5 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு புதிதாக ஒரு அரசு அமைந்தவுடன் ஆட்சி மாறிவிட்டது, பழைய காட்சிகள் நடைபெறாது என்று நினைத்த மக்கள் தலையில், நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் இடியை இறக்கி இருக்கிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. எந்த ஒரு சமூக விரோத செயல்களை சுட்டிக் காட்டினாலும், அவைகள் தனி மனித வக்கிரக் குணங்களின் அடிப்படையில் நடைபெறுகிறது என்று கூறி, பிரச்னையின் தீவிரத்தை இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியாளர்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்கள்.

குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றம் செய்பவர்களை உடனடியாகப் பிடிப்பதற்கும் முயற்சி செய்யாமல், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு, அவர்கள் மீதே பழிபோடும் வேலையையும் ஒருசில அமைச்சர்கள் தொடர்ந்து செய்து வருவது கண்டனத்துக்குரியதாகும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று நம்பி தவெகவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது இரத்த ஆறு ஓடுவது கண்டு திகைத்துப் போய் நிற்கிறார்கள். சட்டம் - ஒழுங்கை காக்க முனைப்புடன் செயல்பட வேண்டிய அமைச்சர்களும், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும், ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் விழாக்களில், முதலில் குத்து விளக்கு ஏற்றுவது யார் என்ற சண்டையில் ஈடுபட்டு வருவது, இந்த அரசின் அலங்கோலத்தைக் காட்டுகிறது. சட்டம் - ஒழுங்கு போலீசார், ஆளுங்கட்சியினரின் குடுமிப்பிடிச் சண்டையை விலக்கிவிடுவதிலேயே பொழுதைக் கழிப்பது, தமிழக மக்களின் தலையெழுத்தாகப் போய்விட்டது. ஆடு, மாடுகளை வெட்டுவதுபோல், மனிதர்களை அலட்சியமாக நடுரோட்டில் வெட்டி வீசி, சாலைகளில் இரத்த ஆறு ஓடும் அவலமும், குற்றவாளிகள் ராஜநடை போட்டுச் செல்லும் அவலமும் தற்போதைய தவெக ஆட்சியில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களை தொடர்ந்து எப்படி ஏமாற்றலாம்; ஆட்சியை எப்படி தக்க வைக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்தும் முதல்வர் விஜய், அவருடைய கையில்தான் தமிழகக் காவல்துறை இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழகத்தில் பணியாற்றும் காவலர்கள் தன் பாதுகாப்புக்காக மட்டுமே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை முதல்வர் விஜய் கைவிட்டுவிட்டு, கொலை பாதகர்களின் கொடும்பிடியில் இருந்து அப்பாவி மக்களைக் காக்கவும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கையில் தமிழகக் காவல் துறையை முனைப்புடன் ஈடுபடுத்தவும் வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami alleges that law and order has collapsed under the TVK government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments