அமைதிக்கான நோபல் பரிசு! நவநீதம் பிள்ளைக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து...
2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வாகியுள்ள தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 85 வயதாகும் நவநீதம் பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என இன்று (அக்.9) அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகவும், ருவாண்டா நாட்டுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பணியாற்றிய நவநீதம் பிள்ளை, அமைதி மற்றும் சர்வதேச சட்டத்திற்கு மேற்கொண்ட முன்னெடுப்புகளால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நவநீதம் பிள்ளைக்கு தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள திருமிகு நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், குரலற்றவர்களின் உரிமைகளுக்காகவும் தமது வாழ்நாளையே அர்ப்பணித்த அவரது நெடிய பயணத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது!
2012-ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர்களின் துயர்மிகுந்த வாழ்வையும், நீதிக்காகவும் கண்ணியமான வாழ்வுக்காகவும் அவர்கள் நடத்திவரும் போராட்டத்தையும் எடுத்துரைத்ததை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தொடங்கி, உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது வரை, துணிச்சலும் கொள்கை உறுதியும் நிறைந்தது அவரது பயணம்! மனித உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் அவர் ஆற்றிவரும் பணி, வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்!” எனக் கூறியுள்ளார்.
MK Stalin has congratulated Navanethem Pillay, of Tamil origin, on being selected for the 2026 Nobel Peace Prize.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.