கோவை: 228 இடங்களில் தீவிர போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட 489 காவலர்கள்!
கோவை புறநகர் பகுதிகளில் 228 இடங்களில் தீவிர போதைப்பொருள் சோதனை நடத்தப்பட்டது குறித்து...
கோவை புறநகர் பகுதிகளில் 228 இடங்களில் தீவிர போதைப்பொருள் சோதனை நடத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை, பதுக்கல், கடத்தலை தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர அமலாக்க நடவடிக்கையை இன்று (அக். 11) மேற்கொண்டுள்ளது. இன்று அதிகாலை தொடங்கி கருமத்தம்பட்டி, பேரூர் உட்கோட்டங்களில் 228 இடங்களில் ஒரே நேரத்தில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 489 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டியின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேடப்படும் குற்றவாளிகள், முன்பு கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், உளவுத் தகவல்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள் ஆகியோரை குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், சொந்த ஊருக்குத் திரும்பாமல் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் கல்லூரி இடைநிற்றல் மாணவர்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
அதன்படி, கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் கோவில்பாளையம் மற்றும் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைகளில் 132 இடங்களும், பேரூர் உட்கோட்டத்தில் மதுக்கரை மற்றும் கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைகளில் 96 இடங்களும் என மொத்தம் 228 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில், கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் 42 குழுக்களும் பேரூர் உட்கோட்டத்தில் 30 குழுக்களும் அமைக்கப்பட்டு, சுமார் 489 காவலர்கள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று அதிகாலையில் தொடங்கிய இந்த தீவிர சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Intensive drug checks were conducted at 228 locations in the suburban areas of Coimbatore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.