எடப்பாடி பழனிசாமியை முழுமையாக நம்புகிறோம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் எஸ்.பி. வேலுமணி அளித்த பேட்டி பற்றி....
எடப்பாடி பழனிசாமியை முழுமையாக நம்புகிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில், அதிமுக என்பது எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, அம்மாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம். கடந்த 50 ஆண்டுகளில் கோவையில் மிகப்பெரிய வளர்ச்சியைத் தந்துள்ளது அதிமுக மட்டுமே. இந்த இயக்கம் தான் எங்களுக்கு அனைத்துப் பதவிகளையும் தந்துள்ளது. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோம். நான் எந்த இடத்திற்கும் செல்லவில்லை, இங்கேயே இருந்து மக்கள் பணியைச் செய்து வருகிறேன். சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி என அனைவரும் என்னை அன்பாக வந்து பார்ப்பார்கள்.
Advertisement
Advertisement
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ளது. நான் பொறுப்பாளராக இருந்தபோது தாராபுரத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றோம். ஆனால் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். நாம் கொடுத்த தொண்டர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளாட்சியில் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். எங்களை முறையான பொறுப்பாளர்களாக நியமிக்கவில்லை என்றாலும், நாங்கள் கொடுத்த பூத்களில் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
அம்மாவின் மறைவிற்குப் பிறகு டி.டி.வி. தினகரன் 20 சீட்டுகள் கேட்டார். அவரும் உள்ளே இருந்திருந்தால் 2021-லேயே அம்மா ஆட்சி அமைந்திருக்கும். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் 4 மத்திய அமைச்சர்களை உருவாக்கியிருக்கலாம். பல கூட்டணிகளை நாம் இழந்துவிட்டோம். அவையெல்லாம் இருந்திருந்தால் கட்சி இன்னும் வலுவாக இருந்திருக்கும். கட்சி நன்றாக இருக்க வேண்டும். அதிமுக நமது இயக்கம். வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் வெளியே சென்றவர்கள், பிரிந்து போனவர்கள் என அனைவரும் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைப்பார் என்றும், பிரச்னைகளை ஆராய்ந்து கட்சியைப் பலப்படுத்துவார் என்றும் நாங்கள் முழுமையாக நம்புகிறோம். செங்கோட்டையன், தவெகசெல்வதற்கு அவருக்கு சில வலுக்கட்டமான சூழல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
Former AIADMK Minister S.P. Velumani stated that the AIADMK should be unified
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.